அமெரிக்கா புலனாய்வு ரகசியங்களை கசிய விட்டதாக கூறப்படும், எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை அகதிகள் குறித்து,  தாம் எவ்வித தேடுதல்களையும் மேற்கொள்ளவில்லை என இலங்கை பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது 

அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான எட்வர்ட் ஸ்னோவ்டன், அமெரிக்க தேசிய பாதுகாப்பு குறித்த தகவல்களை வெளியிட்டமைக்காக தேடப்பட்டு வந்தவராவார். இந்நிலையில் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கிய விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, இலங்கை பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று ஹொங்கொங் நாட்டிற்கு சென்றிருந்தாக குறித்த அகதிகள் சார்பில் குற்றச்சாட்டொன்று எழுப்பப்பட்டிருந்தது.

குறித்த குற்றச்சாட்டுகளை இலங்கை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி, முழுமையான பொய்த்தகவல் எனவும், இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் அவ்வாறானதொரு தேடுதல் நடவடிக்கையை எந்தவொரு நாட்டிலும் மேற்கொள்ளவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

இநிலையில் குறித்த விடயம் தொடர்பாக சீன ஊடகம் ஒன்று பகிர்ந்துள்ள தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளதாகவும், அதனால் குறித்த இலங்கை அகதிகளுக்கு ஹொங்கொங் பொலிஸார் பாதுகாப்பு வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. மேலும் விடயம் தொடர்பில் ஹொங்கொங் காவற்துறையினர் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென அகதிகள் சார்பான சட்டத்தரணி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் 2013ஆம் ஆண்டளவில்  அகதிகளின் பாதுகாப்பில் இருந்த ஸ்னோவ்டன், பின்னர் அங்கிருந்து வேறொரு நாட்டுக்கு தப்பி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நிலையில் தமது அனுபவத்தை பகிர்ந்திருந்த ஸ்னோவ்டன், தான் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை விட, இலங்கை அகதிகள் அதிக ஆபத்துகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.