அமெரிக்காவின் கன்ஸாஸ் மாகாணத்தில், மதுபான விடுதியொன்றுக்குச் சென்ற இரண்டு இந்தியர்கள் மேல் அமெரிக்கர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். இவர் அமெரிக்காவில் பொறியியலாளராகப் பணியாற்றுகிறார். இவரும் இவரது நண்பர் ஆலோக்கும் நேற்று மேற்படி மதுபான விடுதிக்குச் சென்றிருந்தனர்.

அப்போது அங்கிருந்த ஒருவர், ஸ்ரீனிவாஸையும் நண்பரையும் திட்டத் தொடங்கினார். “இது எமது நாடு... நீ உடனடியாக வெளியேறு” என்று கூறிக்கொண்டே திடீரென தனது துப்பாக்கியை எடுத்து இருவர் மீதும் சுடத் தொடங்கினார். இதில் இருவர் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. துப்பாக்கிதாரியைத் தடுக்க வந்த மற்றொருவரும் காயத்துக்கு உள்ளானார்.

மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், ஸ்ரீனிவாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தாக்குதலை நடத்தியவர் தப்பியோடியபோதும், சுமார் ஐந்து மணிநேரத்தில் பொலிஸார் அவரைக் கைது செய்தனர். தாக்குதலை நடத்தியவர் அடம் ப்யூரின்ட்டன் (51) என்பதும், இவர் அமெரிக்க கடற்படையின் முன்னாள் வீரர் என்பதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.