சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கான நிதியம்  கடந்த ஆட்சியில் வேறு விடயங்களுக்கு வீணாகச் செலவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் பிரதியமைச்சர் அருந்திக பெர்னாண்டோ. உனவட்டுன கடற்துறை உலகின் சிறந்த அழகிய கடற்துறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  பிரதியமைச்சர் தெரிவித்தார்.

 கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் அருந்திக பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்தார். 
பிரதியமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில், 
இலங்கையில் உல்லாசப் பிரயாணத்துறையை ஊக்குவிப்பதற்காக தனியான ஒரு நிதியம் இருந்தது. ஆனால் கடந்த ஆட்சியில் இந்நிதியம் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக செலவு செய்யப்படவில்லை.
மாறாக வேறு அநாவசியமான விடயங்களுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு கடந்த காலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சு பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன் இணை அமைச்சாகவே செயற்பட்டது.
தற்போதைய ஆட்சியில் தான் சுற்றுலாத்துறைக்கென தனியான அமைச்சு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
எனவே இலங்கையின் 8 முக்கிய விடயங்களை முதன்மைப்படுத்தி சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பௌத்த மதம், கலை கலாசாரம், வரலாறு, திருவிழாக்கள், விளையாட்டுக்கள், கடற்கரை வன ஜீவராசிகள், இயற்கைச் சூழல் என முதன்மைப்படுத்தி வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் இலங்கை வருவதை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.
அத்தோடு நாட்டில் தற்போது புதிதாக ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. அவற்றிற்கு தேவையான மனித வளங்களை வழங்கும் விடயத்திலும் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதற்காக ஹோட்டல் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. ஹோட்டல்களுக்கு தேவையான மனித வளங்களை இதன் மூலம் வழங்க முடியும்.
அதேவேளை அமெரிக்காவின் ஊடக அமைப்பொன்று மேற்கண்ட கணிப்பீட்டுக்கு அமைய இலங்கையின் உனவட்டுன கடற்கரை அழகிய சிறந்த கடற்கரையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.