ஒழுக்கப் பண்புகளுடன்கூடிய அநேக பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்வகையில் ஒரு சிறுபிரிவினரால் அசாதாரணமான முறையில் செயற்படுத்தப்படும் பகிடிவதையைத் தடுப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகங்களுடன் இணைந்து விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.  

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலம் குறித்து அரசாங்கத்திற்கு பொறுப்பு உள்ளது. இதனை குறைபாடுகளின்றி அரசு நிறைவேற்றிவரும் நிலையில் முறையற்ற நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழகங்களில் இடமளிக்கமுடியாது என ஜனாதிபதி தெரிவித்தார். 

இன்று முற்பகல் இடம்பெற்ற மத்துகம, ஆனந்த தேசிய கல்லூரியின் 75ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

நேற்று முன்தினம் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞானபீட மாணவர்களினால் புதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அசாதாரணமான பகிடிவதை, இலவச கல்வியின் ஒரு சாபக்கேடு எனத் தெரிவித்த ஜனாதிபதி இந்நிகழ்வு தொடர்பாக தான் கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் விசாரணை மேற்கொண்டதுடன் மிலேச்சத்தனமான இச்சம்பவம் குறித்து அரசாங்கம் வருத்தம் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். 

கல்விமான்கள் மற்றும் மேதைகளை உருவாக்கும் பல்கலைக்கழகத்தின் கௌரவத்தை பாதிக்கும் இவ்வாறான செயல்கள் இலவசக்கல்விக்கு செய்யப்படும் அவமதிப்பு என வலியுறுத்திய ஜனாதிபதி, எமது நாட்டின் 40-50 வருடகால பல்கலைக்கழக வரலாற்றில் பகிடிவதை தொடர்பாக கரும்புள்ளிகள் காணப்படுவதோடு பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படும் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அவர்களது பெற்றோரின் நிம்மதியை துயரக்கண்ணீராக மாற்றும் வகையில் மாணவர்கள் செயற்படக்கூடாது எனவும் தெரிவித்தார்.