பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காத்திரமான  தீர்மானம் எடுக்க முடியாதிருப்பதானது அவர் இராணுவ பிடிக்குள் இருக்கின்றாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபையில் சந்தேகம் வெளியிட்டது.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தாவது,

கேப்பாபுலவு மக்களின் பிரச்சினை இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது  விரைவில் தீர்வு வழங்குவதாக குறிப்பிட்டார்.

எனினும் தற்போது வரையில் தீர்வு வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது இப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியோ, பிரதமரோ எந்தவொரு கருத்தும் தெரிவிப்பதாக இல்லை. 

தற்போது அப்பிரதேச மக்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர்.  இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதாக இல்லை. பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி வகித்த போதிலும் அவரினால் எந்தவொரு காத்திரமான தீர்மானமும் எடுக்க முடியாமல் உள்ளது. 

அவ்வாறாயின் ஜனதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவத்தின் பிடிக்குள் இருப்பதாகவே தெரிகின்றது. இராணுவத்தின் ஆலோசனைகளை ஜனாதிபதி செவிமடுப்பதாகவே தெரிகின்றது. எமக்கு சில முக்கியத்தர்கள் அவ்வாறான கருத்துப்படவே  தெரிவித்தனர். 

தற்போது வடக்கு மக்கள் இராணுவத்தின் சிறைக்குள் வாழ்ந்து வருகின்றனர். இதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அண்மையில் மன்னாரில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இராணுவ முகாமை மாற்றியமைக்குமாறு கோரியபோது பொலிஸார் இராணுவத்துடன் முரண்பாடுகள் ஏற்படவாய்ப்புள்ளதால் அவ்வாறு அருகே இருக்க முடியாது எனக் குறிப்பிட்டனர். 

அவ்வாறாயின் எவ்வாறு மக்கள் இராணுவ முகாம்களுக்கு அருகில் இருக்க முடியும்? இராணுவ முகாமிற்கு அருகில் மக்களுக்கு இருக்க முடியாது அவர்களுக்கான சொந்த நிலங்கள் விடுவிக்கப்பட்டு பாதுகாப்பான வாழ்விடம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார்.