பிரபஞ்சத்தில் சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்களைப் பற்றிய (exoplanets), புதிய கண்டுபிடிப்பு தகவல்களை நாசா விண்வெளி ஆய்வு மையம் , நாளை வெளியிடவுள்ளது.

சூரியக் குடும்பத்தை தவிர்த்த, ஏனைய  வெளி கோள்களைப் பற்றிய தகவல்கள் மற்றும் வேற்றுகிரக வாசிகள் தொடர்பான ஆய்வியல் தகவல் சமர்ப்பிப்பு சந்திப்பொன்று, நாளை இலங்கை நேரப்படி காலை 11.30 மணிக்கு நாசாவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

குறித்த சந்திப்பில் நாசா அறிவிக்கப்போகும் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி 'தி ஜர்னல் நேச்சர்' தளத்திலும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் உலகநாடுகளில் உள்ள விண்வெளி ஆர்வலர்களிடையே நாசாவின் புது கண்டுபிடிப்புகள் தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 

மேலும் குறித்த சந்திப்பானது அமரிக்காவின் வொஷிங்டன் நகரில் அமைந்துள்ள, நாசா விண்வெளி தலைமை அலுவலகத்தில், நாசாவின் முக்கிய விண்வெளி விஞ்ஞானிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் முன் அனுமதிபெற்ற ஊடகங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் எனவும், குறித்த தகவல் தெரிவிக்கும் சந்திப்பை NASA தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யவுள்ளனர். 

இந்நிலையில் குறித்த தகவல் தெரிவிக்கும் சந்திப்பை http://www.nasa.gov/nasatv என்ற இணைய முகவரியில் பார்க்கலாம். அத்தோடு பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் ட்விட்டர் வலைத்தளம் மூலமாக, #askNASA எனும் குறியீட்டில் கேள்வி கேட்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக, நாசா தலைமையகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.