அரிசி விலையேற்றத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தை கவிழ்க்க சதி மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டும் அரசாங்கம், அரிசியின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும்  அதற்கு மேலதிக விலையில் விற்றால் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் அறிவித்துள்ளது. 

கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அமைச்சர் இங்கு மேலும் குறிப்பிடுகையில்,

இன்றைய நல்லாட்சியை கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற முனையும் சில சதிகாரர்கள் சில அரிசி ஆலை உரிமையாளர்களுடன் இணைந்து நாட்டில் செயற்கையான அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தி  உள்ளூர் உற்பத்தி அரிசியின் விலையை அதிகரிக்கச் செய்துள்ளனர். 

சில அரசியல்வாதிகளுடன் இணைந்து சில உள்ளூர் அரிசி ஆலை உரிமையாளர்களும் அரிசியை மறைத்துவைத்து விலையை அதிகரிக்கச் செய்துள்ளனர். இவர்களும் அரசை கவிழ்க்கக உதவுகின்றனர் என்றே தோன்றுகின்றது. எனவே அரிசி ஆலை உரிமையாளர்களுடனும் அரிசியை இறக்குமதி செய்யும் வர்த்தகர்களுடனும் ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பாக அமைச்சரவை உபகுழுவும் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

இதற்கமைய உள்ளூரில் உற்பத்தி செய்யும் அரிசிக்கு ஒரு விலையும் இறக்குமதி செய்யும் அரிசிக்கு வேறோரு விலையும் நிர்ணயிக்கப்பட்டது. அத்தோடு அரிசி இறக்குமதியாளர்களுக்கான வரி 5 வீதம் குறைக்கப்பட்டது. அது மட்டுமல்லாது அரிசிக்காக அரசு நிர்ணய விலை நிர்ணயிக்கப்பட்டது. அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது. 

இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசியின் உயரிய விலை ரூபா 72 ஆகவும்  உள்ளூர் உற்பத்தி நாட்டரிசியின் உயரிய விலை ரூபா 80 ஆகவும் இறக்குமதி செய்யப்படும் பச்சையரியின் உயரிய விலை ரூபா 70 ஆகவும்  நிர்ணயிக்கப்பட்டது. உள்ளூரில்  உற்பத்தி செய்யப்படும் பச்சை அரிசியின் உயரிய விலை ஒரு கிலோ ரூபா 78 ஆகவும் இறக்குமதி செய்யப்படும்  சம்பா அரிசியின் உயரிய விலை கிலோ   ரூபா 80 ஆகவும் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் ஒரு கிலோ சம்பா அரசியின் விலை ரூபா 90 ஆகவும் அரசாங்கத்தால் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

எனவே நிர்ணயிக்கப்பட்ட விலையை  மீறி   விலைகளை அதிகரித்து அரிசி  விற்பனை செய்யப்பட்டால் அவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமக்கள் முறையிடலாம். நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு இவ்வாறு அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கும். அவ்வாறானவர்கள் உடனடியாக கைதுசெய்யப்படுவார்கள். 

மக்களுக்கு தேவையான அரிசி தொகை அரசாங்கத்திடம் உள்ளது. எனவே நாட்டில் ஒரு போதும் அரசி தட்டுபாடு ஏற்படாது. ஏற்படவும் போவதுமில்லை.  எனவே சதிகாரர்களின் பொய்யான பிரசாரத்திற்கு ஏமாந்துவிட வேண்டாம். 

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதில் அரசாங்கம் ஈடுபடாது. இதனை  தனியார் துறையினரிடமே அரசாங்கம் கையளித்துள்ளது. 

அரிசி இறக்குமதிக்காக அரசாங்கம் எந்த நாட்டுடனும் உடன்படிக்கைகளை செய்துகொள்ளவில்லை. மாறாக இலங்கைக்கு தரமான அரசியை வழங்குமாறு ஜனாதிபதி இந்தியாஇ பர்மாஇ தாய்லாந்து நாடுகளுக்கு அறிவித்துள்ளார். அரிசியை இறக்குமதி செய்யும் போது சுங்கப் பிரிவினர் சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.