இலங்கையில் நீண்டகலமாக புரையோடிப்போயிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் 2017ஆம் ஆண்டிற்குள் தீர்வு காணப்படவேண்டும் என அப்பிரச்சினைகளை கையாளும் அனைத்து தரப்பினர்களுக்கு உறுதியாக சொல்வதற்காக இம்முறை மேற்கொண்டுள்ள உத்தியோக பூர்வ விஜயத்தின் முக்கிய நோக்கமாகவுள்ளதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகாராலயத்தில் அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் இந்திய இராஜதந்திர சேவையின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான ஒழுங்குபடுத்தல்களையும் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் மனோ கணேசன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட தரப்புக்களைச் சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இச்சந்திப்புக்களில் போது வெளிவிவகாரங்களுக்கான செயலாளர் ஜெய்சங்கர், இலங்கையில் நீண்டகாலமாக பிரச்சினைகள் தொடர்ந்தவண்ணமுள்ளன. தொடர்ந்தும் இவ்வாறு பிரச்சினைகள் நீண்டு கொண்டு செல்வதற்கு இடமளிக்க முடியாது. 

இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்து விடயங்களையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றன.  அமெரிக்கா, யப்பான் உள்ளிட்ட பல நாடுகளுடன் இந்தியா புரிந்துணர்வுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இலங்கை விடயத்தில் அதீத கரிசனைகள் கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது. 

எனவே இலங்கையில் புரையோடிப்போயிருக்கும் பிரனைசினைகள் அனைத்திற்கும் 2017இற்குள் ஒரு தீர்க்கமான தீர்வைக் காணவேண்டும் என்ற செய்தியை சம்பந்தப்பட்ட  அனைத்து தரப்பினருக்கு உறுதியாகச் சொல்வதே எனது இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாக இருக்கின்றது என ஒருகட்டத்தில் தெரிவித்துள்ளார். 

இதேவேளை இலங்கையில் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கும், வடக்கு கிழக்கில் பாதைகள் புனரமைப்பு உட்பட உட்கட்டமைப்பு மேம்பாடுகளில் கூடிய கவனம் செலுத்துததல், வடக்கு கிழக்கில் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையிலான முதலீடுகளை முன்னெடுத்தல் குறித்தும் அதிகளவில் இந்திய வெளியுறவுச் செயலாளர் கவனம் செலுத்தியதாகவும் இரஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.