ஈழத்து மண்ணில், மிகச்சிறந்த ஓர் 'ஒளிப்பதிவுத் தொழில் நுட்ப வல்லுனராக' வரலாறு படைப்பார் என நான் எதிர்பார்த்த தம்பி 'சஞ்ஜீவ்', வாகன விபத்தில் தன் இன்னுயிரை நீத்தார் என்ற அதிர்ச்சிச் செய்தி, என்னைப் பெரும்சோகத்தில் ஆழ்த்திவிட்டது என இலங்கையின் பிரபல அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மூன்று மாதங்களுக்கு முன், எண்ணற்ற கனவுகளுடன் என்னைச் சந்தித்த சஞ்சீவ் தன் 'Drone Camera' மூலம் 'ஒரு பறவையின் பார்வையில்' யாழ் மண்ணின் அழகைப் படம்பிடித்து அனுப்பிய திறமை பார்த்து வியந்துபோனேன்.

பிறப்பவர் எல்லோருமே, என்றோ ஓர் நாள் இறப்பது உறுதி. ஆனால், 23 வயதில் இறப்பு...! பெற்றோருக்கு மட்டுமல்ல அவரை நேசித்த அனைவருக்குமே இது ஓர்-பேரிழப்பு.

தம்பி சஞ்ஜீவ் அவர்களது ஆன்மா, நற்பேறு அடைய பிரார்த்திக்கின்றேன். அவரை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். என்று குறிப்பிட்டிருந்தார்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்தில்  மிகச்சிறந்த ஒளிப்பதிவுத் தொழில் நுட்ப வல்லுனரான யாழ். நகரைச் சேர்ந்த செல்லக்கணபதிப்பிள்ளை சஞ்ஜீவ் என்ற 23 வயதுடைய இளைஞர் உயிரிழந்தார்.

குறித்த இளைஞர் வந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த சிறிய ரக உழவு இயந்திரத்துடன் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. அத்துடன் குறித்த விபத்துக்கு அதி வேகமே காரணம் என்று பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.