ஒன்பது வயதுச் சிறுமியொருவர் குளிர்பானம் ஒன்றைக் குடிக்க மறுத்ததையடுத்து, குளிர்பானப் பக்கற்றின் தோற்றத்தை மாற்ற குறித்த நிறுவனம் சம்மதித்துள்ளது.

ம்ரிகங்கா மஜும்தார் என்பவர் டெல்லிவாசி. இவர் அண்மையில் ஒன்பது வயது நிறைந்த தன் மகளுக்கு குளிர்பானப் பக்கற் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதில், ஒரு சிறுவனின் படம் பொறிக்கப்பட்டிருந்ததுடன், ‘உங்கள் மகனுக்கு நல்லதை மட்டுமே கொடுங்கள்’ என்பதாக வசனமும் பொறிக்கப்பட்டிருந்தது.

இதைக் கண்ட அந்த ஒன்பது வயதுச் சிறுமி, இது சிறுவர்களுக்கு மட்டுமே உரியது என்றும், சிறுமியர் குடிக்க ஏற்றதல்ல என்றும் கூறி அதைக் குடிக்க மறுத்துவிட்டார்.

இதுபற்றி, குளிர்பான உற்பத்தி நிறுவனத்துக்கு மஜும்தார் கடிதம் எழுதினார். அதற்கு பதில் அனுப்பிய அந்த நிறுவனம், ஆண்-பெண் பால் வேறுபாட்டை நாம் ஊக்குவிக்கவில்லை என்றாலும், இதுபோன்று தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம் என்பதால், இனிவரும் காலங்களில் இந்தப் பொதியின் வடிவம் மாற்றியமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.