கைக்குழந்தைகளைப் பராமரிப்பது தாய்மாருக்கு கைவந்த கலையாக இருந்தாலும், தந்தையர்க்கு அது ஒரு சோதனைதான். புதிதாகத் தந்தையாவோர் அவ்வப்போது இந்தச் சோதனைக்கு ஆளாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவது சகஜமே!

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக அமெரிக்காவின் நடனப் பாடசாலையொன்று புதிய நடன வகையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 

‘க்ரூவாரூ’ என்ற இந்த நடனப் பாடசாலை, தந்தையரும், அவர்களது கைக்குழந்தைகளும் இணைந்து ஆடக்கூடிய ஒரு நடனத்தைப் பயிற்றுவிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நடனப் பயிற்சி குறித்த காணொளியொன்று ஃபேஸ்புக்கில் பரபரப்பாகப் பரிமாறப்பட்டு வருகிறது.

அதில், குழந்தைகளைத் தாங்கும் உறைகளை அணிந்துகொண்டு, அதில் தம் குழந்தைகளை வைத்தபடி தந்தையர்கள் சிலர் சில நடன அசைவுகளைச் செய்கின்றனர். குழந்தைகளை அரவணைத்தபடியும் ஆடக்கூடிய இந்த ஆட்டத்தின்போது, குழந்தை அழுகையை நிறுத்திவிடும் என்பதோடு, குழந்தையைத் தனியாகப் பராமரிப்பதில் தந்தையர் முகங்கொடுக்கும் அசௌகரியங்களும் களையப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் இந்த நடன முறைக்கு ஆதரவு எழுந்திருப்பதோடு, ஃபேஸ்புக்கில் மட்டும் இதுவரை நான்கரைக் கோடிப் பேர் இந்த நடனக் காட்சியைக் கண்டுகளித்துள்ளனர்.