ஆப்கானிஸ்தானில் திடீர் தாக்குதல் நடத்திய தலிபான்கள் ஐந்து பேரைக் கொலை செய்ததுடன் ஐம்பது பேரைக் கடத்தியும் சென்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் ஃபர்யாப் மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றினுள் திடீரெனப் புகுந்த தலிபான்கள் பொலிஸார் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டனர்.

பொலிஸாரும் பதில் தாக்குதல் நடத்தி ஐந்து தலிபான்களைக் கொன்ற போதும், எதிர்பாராத வகையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் பொலிஸார் நிலைகுலைந்து தப்பியோடினர். இதையடுத்து அந்தக் கிராமத்தை முற்றிலும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் தலிபான்கள் கொண்டுவந்துள்ளனர்.

இதேவேளை, அண்டை மாகாணமான ஜௌஸ்ஜானுக்குள் புகுந்த தலிபான்கள், அங்குள்ள ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஐம்பது பேரைக் கடத்திச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து தலிபான்கள் எந்தவித அறிவித்தலையும் விடுக்கவில்லை என்றும், இதனால், கடத்தலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்றும் ஜௌஸ்ஜான் மாகாண ஆளுனரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.