அர்ஜூன மகேந்திரன் தற்போது அரசாங்கத்தின்   எந்தவொரு  உத்தியோகப்பூர்வ பதவியிலும்  இல்லை என்பதை மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். அவர் ஒருசில அமைச்சர்களை சந்தித்துப் பேசலாம். ஆனால் அவர் எந்தவொரு பொறுப்புமிக்க பதவியிலும் இல்லை என்று  அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.  

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு  கருத்து வெளியிடுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

அமைச்சர்  அங்கு மேலும்  குறிப்பிடுகையில்,

கேள்வி: மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் தனது சொந்த செலவிற்காக  மத்திய வங்கியின்  6 கோடி ரூபாவை செலவழித்துள்ளதாக   குற்றஞ்சாட்டப்படுகின்றது.  இது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

பதில்: இவற்றுக்கெல்லாம்  சேர்த்துதான்  அவரைப் பதவியிலிருந்து நீக்கினோம். அதுமட்டுமன்றி பிரதமரின் ஆலோசனையின் பேரில் சட்டமா அதிபர் திணைக்களம்  அர்ஜுன மகேந்திர தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறது.  

அதுமட்டுமன்றி அவர் தொடர்பில்  மூன்றுமாதகாலத்தில்    விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு   ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். மேலும்  மத்திய வங்கியும் உள்ளக ரீதியில்  விசாரணையொன்றை நடத்தி வருகிறது.  இதனைவிட  வேறு ஒன்றும் செய்ய முடியாது என நம்புகின்றோம். 

கேள்வி: அவர் தற்போதும் சில கூட்டங்களில் கலந்துகொள்வதாக தெரிகிறதே?

பதில்: இல்லை. அர்ஜூன மகேந்திரன் தற்போது அரசாங்கத்தின்   எந்தவொரு  உத்தியோகப்பூர்வ பதவியிலும்  இல்லை என்பதை மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். அவர் ஒருசில அமைச்சர்களை சந்தித்துப் பேசலாம். ஆனால் அவர் எந்தவொரு பொறுப்புமிக்க பதவியிலும் இல்லை.