இங்கிலாந்து அணியின் டெஸ்ட் அணித் தலைவராக செயற்பட்ட  அலாஸ்டர் குக்கின் இடத்துக்கு ஜோ ரூட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் பல சிரேஷ்ட வீரர்கள் இருக்கின்ற போதும் இளம் வீரர் ஒருவர் டெஸ்ட் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் அலாஸ்டர் குக். 

2012ஆம் ஆண்டில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக பொறுப்பேற்ற குக் 59 போட்டிகளில் தலைவராக இருந்துள்ளார். இந்த காலப் பகுதியில்  2 ஆஷஸ் தொடர்கள் உட்பட பல தொடர்களில் இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். 

2012 ஆம் ஆண்டு விஸ்டன் கிரிக்கெட் வீரர் விருதையும், 2013ஆம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் அணித் தலைவர் விருதையும் வென்றுள்ளார். 

மேலும் 140 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 ஆயிரத்து 57 ஓட்டங்களை குவித்து சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற டெஸ்ட் தலைவாக இருந்த குக்கின் வாழ்க்கையை சமீபத்தில் நடந்த இந்தியத் தொடர் புரட்டிப் போட்டது. 

இந்தத் தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வென்றதால் தலைவர் பொறுப்பில் இருந்து குக் விலக வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. 

இதனையடுத்து கடந்த 7 ஆம் திகதி இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து அலாஸ்டர் குக் விலகினார்.

இதனையடுத்து இங்கிலாந்து அணியில் ஸ்டுவட் போர்ட், ஜேம்ஸ் ஹென்டர்சன் மொயின் அலி மற்றும் ஜொஸ் பட்லர் போன்ற சிரேஷ்ட வீரர்கள் இருக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணிக்குள் நுழைந்து நான்கு வருடங்களை மாத்திரம் பூர்த்தி செய்த இளம் வீரரான ஜோ ரூட் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குக் அணித் தலைவர் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து முன்னாள் அணித் தலைவரும் தற்போதைய இங்கிலாந்து அணியின் இயக்குனருமான ஹென்ரு ஸ்ட்ரோஸ் ஜோ ரூட்டை தலைமை பொறுப்பை ஏற்குமாறு கூறினார்.

எனினும் கடந்த ஒரு வாரமாக இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தையின் பின்னர் ஜோ ரூட் இங்கிலாந்தின் டெஸ்ட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.