விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டதே தமிழ் தேசிய கூட்டமைப்பு. அதன் உருவாக்கத்தில் எனக்கும் பங்கிருக்கிறது. ஊடகவியாளர் சிவராமின் தலைமையிலேயே முதன் முறையாக இக்கட்சி தோற்று விக்கப்பட்டது. அதை வெளியில் சொல்வதற்கு கூட சம்பந்தன் மறுக்கிறார். இவ்வாறு முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் அவரது தலைமையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற புதிய அரசியல் கட்சி உருவாக்கம் தொடர்பாக இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசும்போதே இதனைத் தெரிவித்தார். 

மட்டக்களப்பு போகஸ் மண்டபத்தில் இந்நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.

தொடர்ந்து பேசிய அவர், இன்று தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் ரீதியிலான பாரிய குழப்பநிலை காணப்படுகின்றது. தமிழ் மக்களுக்கொரு கட்சி தேவை என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். அதற்காகத்தான் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழரசுக் கட்சி போன்ற கட்சிகள் தோற்றம் பெற்றன. ஆனால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பாரிய குழப்பநிலை தலை தூக்கியுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் சிவி .விக்னேஸ்வரன் ஒன்றைச் செய்தால் மற்றவர்கள் அதற்கு தடைவிதிக்கிறார்கள். கேபாபுலவில் எங்களின் நிலங்களைப் பெற்றுக் கொடுப்போம் என்று ஒத்துழைக்கப்போனால் அதற்குள்ளும்  எதிர்ப்பு. இவ்வாறானதொரு சூழலில்தான் தமிழ் மக்களின் அரசியல் சூழல் சென்று கொண்டிருக்கிறது.

நீங்கள் இவ்வளவு காலமும் ஏன் கருணா அம்மான் வெளியே வராமல் இருந்தார் என்று சிந்தித்திருக்கலாம். கவிஞர் காசி ஆனந்தன் அடிக்கடி கூறுவார் நிறைவாகும் வரை மறைவாக இரு என. இப்போதுதான் அதற்கான காலம் கனிந்திருக்கிறது. தமிழ் மக்களுக்கு தலமை தாங்கும் தகுதியான தலைவர்கள் இன்றில்லை. அதற்காகத்தான் இவ்வாறாதொரு அமைப்பை தோற்றுவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. என்றார்.