இன ஐக்­கி­யத்­தையும் அதி­காரப்பர­வ­லாக்­க­லையும் உறு­திப்­ப­டுத்தும் வகையில் அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்டும். மத ரீதி­யிலும், இன ரீதி­யிலும் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்தும் அர­சியல் மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்­து­வதை நாம் அனு­ம­திக்­கவும் மாட்டோம்.

ஆத­ரிக்­கவும் மாட்டோம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் ஊடகப் பேச்­சாளர் விஜித ஹேரத் தெரி­வித்தார்.

இன­வா­தத்தை கையி­லெ­டுக்க மஹிந்த தரப்பு சரி­யான ஒரு சந்­தர்ப்­பத்தை எதிர்­பார்த்து காத்­தி­ருப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

மக்கள் விடு­தலை முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பின் போது அர­சியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் நிலைப்­பாட்டை வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் ஒன்று இன்னும் ஏற்­ப­ட­வில்லை. இப்­போது அதற்­கான ஆலோ­ச­னை­களும் ஒரு சில கார­ணி­களும் மட்­டுமே முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இது ஒரு ஆலோ­சனை மட்­டு­மே­யாகும். அதேபோல் இந்த ஆலோ­ச­னையின் போதும் நாட்டில் அதி­கார பகிர்வு, ஐக்­கியம் என எதையும் கூற­வில்லை.

ஆனால் மஹிந்த ஆத­ரவு அணி­யினர் இன­வா­தத்தை கையி­லெ­டுக்க ஒரு சந்­தர்ப்­பத்தை எதிர்­பார்த்து காத்­தி­ருக்­கின்­றனர். அதற்­கா­கவே தினேஷ், விமல் போன்­ற­வர்கள் குழப்­பத்தை ஏற்­ப­டுத்த முயற்­சித்து வரு­கின்­றனர்.

எவ்­வாறு இருப்­பினும் நாட்டை ஐக்­கியப் படுத்தும் வகை­யிலும், இன ஒற்­று­மையை பலப்­ப­டுத்தும் அடிப்­ப­டை­யிலும் அர­சியல் அமைப்பு மாற்றம் ஒன்று அவ­சி­ய­மா­னது. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்­குதல், அதி­கார பர­வ­லாக்கல் என்­பன கட்­டா­யப்­ப­டுத்த வேண்டும். அதேபோல் நாட்டை பிரிக்கும், நாட்டில் மீண்டும் போராட்­டங்­களை உரு­வாக்கும் வகையில் ஒரு அர­சியல் அமைப்பு உரு­வா­வ­தையோ அல்­லது மத ரீதி­யிலும், இன ரீதி­யிலும் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்தும் அர­சியல் மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்­து­வதை நாம் அனு­ம­திக்க மாட்டோம். ஆத­ரிக்­கவும் மாட்டோம்.

அதேபோல் முதலில் அர­சாங்கம் ஏனைய கட்­சி­களை அழைத்து பேச்­சு­வார்த்தை நடத்­தாது அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்­ன­வென்­பதை தெளி­வாக கூற வேண்டும். பிர­தான இரண்டு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து இந்த மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முயற்­சிப்­ப­தனால் முதலில் இவர்­களின் வரைபை முன்­வைக்க வேண்டும். அதன் பின்னர் ஏனைய கட்­சி­களின் ஆலோ­ச­னை­க­ளையும், விருப்­பங்­க­ளையும் அறிந்­து­கொண்டு இறு­தியில் நாட்­டிற்கு தேவை­யான வகையில் அர­சியல் அமைப்பு ஒன்றை உரு­வாக்க முடியும்.

ஆனால் அர­சாங்கம் இப்­போது அடிப்­ப­டையில் எழுந்­துள்ள பிரச்­சி­னை­களை மூடி மறைக்கும் வகை­யி­லேயே புதிய அர­சியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் கருத்­துக்­களை முன்­வைக்க ஆரம்­பித்­துள்­ளது.

மக்­களின் பிரச்­சி­னைக்கு அர­சியல் அமைப்பில் தீர்வு காண்­ப­தாக கூறு­கின்­றனர். ஆனால் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னைக்கு அர­சியல் அமைப்பு மாற்­றத்தின் மூல­மாக தீர்வு கிடைக்­காது. விவ­சா­யி­களின் பிரச்­சினை, மாண­வர்­களின் கல்வி பிரச்­சினை, மக்­களின் பொரு­ளா­தார பிரச்­சினை அனைத்­தையும் அர­சியல் அமைப்பின் மூலம் தீர்க்க முடி­யாது. அவற்றை நடை­முறை சார்ந்து கையாள வேண்டும். மக்­களை தொடர்ந்தும் ஏமாற்றும் வகையில் அர­சாங்கம் நடந்­து­கொள்ள கூடாது.

அர­சியல் அமைப்பு ஒன்று அவ­சியம், அதில் நிறை­வேற்று அதி­காரம் முழு­மை­யாக நீக்­கப்­பட வேண்டும். அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு கிடைக்க வேண்டும். மூவின மக்­களும் அமை­தி­யாக வாழ்­வ­தையும், இன மத செயற்­பா­டு­க­ளுக்கு தீர்வு கிடைப்­ப­தையும் உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல் இந்த புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் கட்டாயமான மக்கள் கருத்து கணிப்பு ஒன்று அவசியம். அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டதவுடன் மக்கள் கருத்துக் கணிப்பிற்கு விடுத்தே உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல் மக்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு முதலில் உடனடி தீர்வு அவசியம் என்றார்.