‘நி யூட் கல்ச்சர்’ - அதா­வது, நிர்­வாணக் கலா­சாரம் - பற்றிக் கேள்­விப்­பட்­டி­ருக்­கி­றீர்­களா? இல்­லை­யென்றால், உங்­க­ளுக்கு ஏறக்­கு­றைய ஐம்­பது வய­துக்கு மேல் ஆகி­விட்­டது என்று அர்த்தம்! உலக மய­மாக்கல், ‘க்ளோபல் வில்லேஜ்’ போன்ற நவீன தத்­து­வங்­களின் ‘பின் நவீ­னத்­துவ’ விகார வடிவம் இந்த நியூட் கல்ச்சர்!

வள­ரிளம் குழந்­தைகள், பதின்­ப­ரு­வத்து விட­லைகள், திரு­ம­ணத்­துக்­காகக் காத்­தி­ருக்கும் யுவன்,-யுவ­திகள், அன்­புக்­காக ஏங்கும் இல்­லத்­த­ர­சிகள் என்று பலரும் இன்று இந்த நியூட் கல்ச்­சரின் பிர­தி­நி­தி­க­ளாக விளங்­கு­கி­றார்கள், இதன் கொடூர முகம் பற்றித் தெரி­யா­ம­லேயே! அது தெரி­ய­வ­ரும்­போது, உயிரை மாய்த்­துக்­கொள்ளும் தவ­றான முடிவை எடுத்­து­வி­டு­கி­றார்கள்.

பெண்கள் - வயது வித்­தி­யா­ச­மின்றி - தற்­கொலை செய்­து­கொள்ளும் செய்­தி­களை நாளாந்தம் பார்க்­கிறோம், கேட்­கிறோம், படிக்­கிறோம்! ஆனால், அச்­செய்­திகள் மீதான ஆர்வம், அந்த மர­ணங்­களின் பின்­ன­ணியை ஆராய்­வதில் இல்­லாமல் போய்­வி­டு­கி­றது. அப்­படி ஆராய்ந்து பார்ப்­போ­மே­யானால் கணி­ச­மான உயிர்கள் பறிக்­கப்­பட்­ட­தற்கு இந்த நியூட் கல்ச்­சரே காரணம் என்­பதைப் புரிந்­து­கொள்­ளலாம்.

‘எங்­க­ளிடம் இன்பம் பெறு­வ­தற்­காக ஆண்கள் அன்பைக் கொட்­டு­கி­றார்கள்; அவர்­க­ளது அன்பைப் பெறு­வ­தற்­காக நாம் இன்­பத்தைக் கொட்­டு­கிறோம்’ - நியூட் கல்ச்­சரின் பயங்­கரம் தெரி­யாத ஒர் இளம் மாணவி அதற்குக் கொடுக்கும் வரை­வி­லக்­கணம் இது! ஜீர­ணிக்க முடி­ய­வில்லை, அல்­லவா?

நியூட் கல்ச்சர் என்றால் என்ன?

தமது நிர்­வாணத் தோற்­றத்தை (பெரும்­பாலும்) தனது காத­ல­னுக்கு படம் பிடித்து அனுப்­பு­வதே நியூட் கல்ச்­சரின் அரிச்­சு­வடி! காதல் வயப்­பட்ட இளம் பெண்கள், மாண­விகள் தம் காதல் மீதும் காதலன் மீதும் முழு நம்­பிக்கை வைத்­தி­ருப்­பதை உறு­தி­செய்­வ­தற்கு அச்­சா­ர­மாக தமது நிர்­வாணப் படங்­க­ளையும் வீடி­யோக்­க­ளையும் அவர்­க­ளுடன் பகிர்ந்­து­கொள்­கி­றார்கள் அல்­லது பகிர்ந்­து­கொள்ளப் பணிக்­கப்­ப­டு­கி­றார்கள். ‘காதலை நிரூ­பிக்க நிர்­வாணப் படத்தைக் கேட்­கி­றானே?’ என்ற சந்­தேகம் கிஞ்­சித்தும் இன்றி ஒரு சில நொடி­களில் தனது அந்­த­ரங்­கத்தைப் பகிர்ந்­து­கொள்ளத் துணி­கி­றார்கள் பெண்கள்! இன்­றைய காதலர் சமூகம் தமது தார்­மீகக் கட­மை­யாக எண்ணி இதைச் செய்யத் தொடங்­கி­யி­ருப்­பது, இதன்­பா­லான ஈர்ப்பின் வீரி­யத்தை வெளிக்­காட்­டு­கி­றது.

பிரச்­சினை என்­ன­வென்றால், இப்­போது இலங்­கை­யிலும் இந்தக் கலா­சாரம் பரவத் தொடங்­கி­விட்­டது என்­ப­துதான்!

பாதிக்­கப்­ப­டு­ப­வர்கள் யார்?

2015ஆம் ஆண்டு முதல் இலங்­கையின் வெவ்­வேறு பாட­சா­லை­களைச் சேர்ந்த சுமார் எழு­ப­துக்கும் மேற்­பட்ட மாண­வியர் தமது அந்­த­ரங்க / நிர்­வாணப் புகைப்­ப­டங்கள் இணை­ய­த­ளங்­களில் கசிந்­தி­ருப்­ப­தாக ‘க்ராஸ்­ரூட்டட் ட்ரஸ்ட்’ என்ற அமைப்பில் புகார் செய்­தி­ருக்­கின்­றனர். இச்­செய்தி நிச்­சயம் பதின்­ப­ருவப் பிள்­ளை­களைக் கொண்ட பெற்றோர் மனங்­களைக் கிலி­கொள்­ளவே செய்யும்.

பதி­வு­செய்­யப்­பட்ட புகார்கள் மட்­டும்தான் இவை என்றால், வெட்­கத்­தாலும், பயத்­தாலும், இப்­ப­டி­யொரு அமைப்பு இருப்­பது பற்றி அறி­யா­மை­யாலும் இன்னும் எத்­தனை மாண­வியர் தமக்­குள்­ளேயே போட்டு மூடி­யி­ருப்பர்? எத்­தனை பேர் அத­னுடன் சேர்த்து தம்­மையும் மண்­ணுக்குள் மூடி­யி­ருப்பர்?

மாண­வியர் மட்­டு­மல்ல! இளம் பெண்கள், இல்­லத்­த­ர­சிகள் எனப் பலரும் வயது, நிலை என்ற எந்த வித்­தி­யா­சமும் இன்றி நியூட் கல்ச்­ச­ருக்குப் பலி­யாகி வரு­கின்­றனர்.

கல­வி­யின்பால் ஆர்வம் சற்று அதி­க­முள்ள பெண்கள் தமது அந்­த­ரங்க உறுப்­புக்­களைப் படம் பிடித்து அனுப்­பு­கி­றார்கள், ‘கண்­டு­பி­டித்­து­விட முடி­யாது’ என்ற நினைப்பில்! ஆனால், படங்கள் அல்­லது வீடி­யோக்கள் அனுப்­பப்­பட்ட கணினி, இணை­ய­தள இணைப்பு போன்­ற­வற்றை ஆராய்ந்து அதன் அடிப்­ப­டையில் சம்­பந்­தப்­பட்ட பெண்ணை ஒரு சில நாட்­களில் மடக்­கி­வி­டு­கி­றார்கள் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள்!

ஏன், எப்­படி நடக்­கி­றது இந்த அக்­கி­ரமம்?

பல கார­ணங்கள் உண்டு என்­றாலும், அடிப்­படை என்­னவோ காதல்தான்!

காதல் பூத்­ததும் ஆண்- பெண் பேதம் மறந்த நிலையில் காத­லனை முழு­மை­யாக நம்பும் பெண்கள் தமது அந்­த­ரங்­கத்தைப் பட­மாக அனுப்பி வைக்­கி­றார்கள். அவனும் அதை பத்­தி­ர­மா­கவே வைத்­தி­ருக்­கிறான். ஆனால், என்றோ ஒருநாள் அவர்­க­ளுக்குள் பிரிவு முளை­வி­டும்­போது அவளைப் பழி­வாங்கும் ஆபத்து, அவ­னது கைக்கெட்டிய தூரத்­தி­லேயே இருக்­கி­றது!

கண­வனைப் பிரிந்த இளம் பெண்கள், அலை­பே­சியில் இது­போன்ற பாது­காப்­பான (?) வடி­கால்­களைத் தேடிச் சென்று சிக்­கிக்­கொள்­கி­றார்கள்.

இது­போன்ற நிர்­வாணப் படங்கள், வீடி­யோக்­களை வாங்­கு­வ­தற்­கென்றே சில இணை­ய­த­ளங்கள் உண்டு. இவ்­வா­றான படங்­களைத் தங்கள் இணை­ய­த­ளத்தில் பகிர்­வ­தற்கு அவை கொடுக்கும் விலை என்ன தெரி­யுமா? அந்த இணை­ய­த­ளத்தின் சீவிய கால உறுப்­பினர் என்ற தகு­தியை மட்­டுமே!

பெண்­ணையும் அவ­ளது கௌர­வத்­தையும் அறி­யாத  சிலர், இதையே வேலை­யாகச் செய்து வரு­கி­றார்கள். தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் நிர்­வாணப் படம் கிடைத்­து­விட்டால் போதும். அதை வைத்­துக்­கொண்டு, ‘உனது தோழியர் எவ­ரதும் நிர்­வாணப் படத்தைத் தந்­து­விட்டால் நீ தப்­பித்­து­வி­டுவாய். இல்­லையேல் உனது மானம் கப்­ப­லேறும்’ என்று மிரட்­டு­கி­றார்கள். அந்த மிரட்­ட­லுக்குப் பணிந்­தாலும், பணி­யா­விட்­டாலும் அந்தப் பெண்ணின் படம் இணைய மேடை ஏறு­வது சர்வ நிச்­சயம்!

இதில் மிகப் பரி­தா­ப­மா­னது என்­ன­வென்றால், ஒரு பெண்ணின் நிர்­வாணப் படம் இல்­லா­ம­லேயே தன்­னிடம் இருப்­ப­தாகச் சொல்லி தங்­க­ளது காரி­யத்தைச் சாதித்­துக்­கொள்­கி­றார்கள் சில கய­வர்கள்!

தனது காத­லனை நம்ப வைப்­ப­தற்­காக அனுப்­பப்­படும் தனது நிர்­வாணப் புகைப்­படம், கண்­ட­வர்­களும் சுய இன்பம் காண்­ப­தற்­கான கரு­வி­யாகப் பயன்­படும் என்­பதைப் பெண்கள் கன­விலும் நினைத்துப் பார்ப்­ப­தில்லை!

இன்­னொரு முக்­கிய கார­ணமும் உண்டு

இரு பாலி­ன­ரையும் நமது சமூ­கத்தில் வளர்க்கும் விதமும் இந்தக் குற்­றங்­க­ளுக்கு குறைந்­த­பட்சத் துணை செய்­கி­றது என்­பது மற்­றொரு அதிர்ச்சி! வய­துக்கு வந்த பெண்ணை ஆண்­க­ளுடன் குறைந்­த­பட்ச நட்­பேனும் பாராட்ட விடாமல் செய்யும் சமூகத் தளை, வள­ரிளம் பெண்­களை இத்­த­கைய படு­கு­ழியில் தள்­ளி­வி­டு­கி­றது. மேலும் கல­வி­யின்பால் நாட்­ட­முள்ள பெண்கள் அதற்­கான வாய்ப்­புகள் கிடைக்­கா­த­தாலும் இது­போன்ற மோசடிப் பேர்­வ­ழி­க­ளிடம் விழுந்­து­வி­டு­கி­றார்கள்.

எது எப்­ப­டி­யா­னாலும், தமது சுய­வி­ருப்பின் பேரி­லேயே தமது அந்­த­ரங்­கத்தைப் பிற ஆண்­க­ளுடன் பகிர்ந்­து­கொள்­கி­றார்கள் என்­ப­துதான் இங்கு கவ­னிக்­கப்­பட வேண்­டி­யது.

யார் அடை­கி­றார்கள் இலாபம்?

காதலில் தோற்ற ஆண்கள் பழி­வாங்­கி­விட்­ட­தாகத் திருப்­தி­ய­டைந்­த­போதும், இதன் பின்­ன­ணியில் ஒரு பாரிய வலை­ய­மைப்பே இருக்­கி­றது.

ஆபாசப் படங்­க­ளையும் வீடி­யோக்­க­ளையும் இணை­யத்தில் தர­வேற்றி, ஆண்­களைச் சூடேற்றிக் குளிர்­காயும் இணை­ய­த­ளங்கள், தமது இணை­யத்­துக்­கான ‘ட்ரெஃபிக் ரேட்’டை உயர்த்­திக்­கொள்­கின்­றன. இதன்­மூலம் உள்­ளாடை விளம்­பரம் முதல் வயாக்ரா விளம்­பரம் வரை இந்த இணை­ய­த­ளங்­களில் குவி­கின்­றன. இதன்­மூலம் இணை­ய­த­ளங்கள் சம்­பா­திப்­பது மாதத்­துக்கு ஆயி­ரக்­க­ணக்­கான டொலர்கள்!

மேலும், பெண்­களின் உடல் பாகங்­களைக் குறிப்­பிடும் கொச்­சை­யான வார்த்­தை­களை சமூக வலை­த­ளங்­க­ளிலும் பதி­வேற்­றி­வி­டு­கி­றார்கள். இத­னாலும் இந்த இணை­ய­த­ளங்­க­ளுக்­கான கேள்வி அதி­க­மா­கி­வி­டு­கி­றது. இதன்­மூ­லமும் தங்­க­ளது தளத்தின் பண மதிப்பைக் கூட்­டிக்­கொள்­கின்­றன இந்தத் தளங்கள்!

உல­க­ளா­விய ரீதியில் பிர­ப­ல­மாக விளங்கும் ஆபாச இணை­ய­த­ளங்கள் பல­வற்­றிலும் ‘இலங்கை’ என்ற ஒரு தனிப் பிரிவே தரப்­பட்­டி­ருக்­கி­றது. இதில், ஸ்மார்ட்ஃ­போன்கள் வாயி­லாகப் பிடிக்­கப்­பட்ட மேற்­படி ‘காத­லுக்­காகத் தம்­மையே துறந்த’ பெண்­களின் படங்கள், வீடி­யோக்கள் குவிந்து கிடக்­கின்­றன. இது, இலங்கைப் பெண்­களின் அந்­த­ரங்­கத்­துக்கு சர்­வ­தேச அளவில் எவ்­வ­ளவு வர­வேற்பு (?) இருக்­கி­றது என்­ப­தையே காட்­டு­கி­றது.

எப்­படித் தடுப்­பது அல்­லது தவிர்ப்­பது?

நிர்­வாணக் கலா­சா­ரத்தைத் தடுப்­ப­தற்கு பல்­வேறு சட்­டங்கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும். மேலும், அந்த சட்டதிட்­டங்கள் எளி­மை­யா­ன­வை­யா­கவும், உணர்­வு­பூர்­வ­மாக அணு­கக்­கூ­டி­ய­தா­கவும், பய­மு­றுத்­தா­த­தா­கவும் இருக்க வேண்­டி­யது அவ­சியம்.

தற்­போது நம் நாட்டில் இணையக் குற்­றங்­களைத் தடுப்­ப­தற்­கான ஒரு தனிப் பிரிவு இருக்­கவே செய்­கி­றது. ஆனால், பதி­னெட்டு வய­துக்கு உட்­பட்­ட­வர்கள் தமது புகார்­களைப் பதிவு செய்ய விரும்­பினால், அவர்கள் தமது பெற்­றோ­ரு­ட­னேயே சமு­க­ம­ளிக்­க­வேண்­டி­யி­ருக்­கி­றது. இது, பாதிக்­கப்­பட்ட பெண்ணைப் பெரும் அசௌ­க­ரி­யத்­துக்­குள்­ளாக்­கு­கி­றது. இதில் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டலாம்.

பதி­னெட்டு வய­துக்கு உட்­பட்­ட­வர்கள் நிச்­ச­ய­மாக பாட­சாலை மாண­வி­ய­ரா­கவே இருக்­க­மு­டியும். அப்­ப­டி­யாயின், அவர்கள் தமது நம்­பிக்­கைக்­கு­ரிய ஆசி­ரி­யை­யுடன் வந்து புகார் தெரி­விக்கும் வசதி ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். இதற்கு, பாட­சா­லை­களில் ஆசி­ரியர் - மாணவர் உறவு வலு­வு­டை­ய­தாக இருக்­க­வேண்­டி­யதும் தவிர்க்­கப்­பட முடி­யாத கார­ணியே! இது­போன்ற விட­யங்கள் ஊட­கங்­களில் கசி­யாமல் பார்த்­துக்­கொள்­ளப்­பட வேண்­டி­யதும் அவ­சி­யமே!

அதே­வேளை, பாதிக்­கப்­பட்ட பெண் பதி­னெட்டு வய­துக்கு மேற்­பட்­ட­வ­ராக இருந்தால், அவர் தனித்துப் புகா­ர­ளித்து சம்­பந்­தப்­பட்­டவர் மீது நட­வ­டிக்கை எடுக்க வழி­வகை செய்­யலாம். 

ஆனால்... இந்த விட­யத்தில் தடுப்­பதை விடத் தவிர்ப்­ப­துதான் சற்று எளி­தா­ன­தாக இருக்கும். தமது பிள்­ளை­க­ளுடன் - குறிப்­பாக, பதின்­ப­ரு­வத்துப் பிள்­ளை­க­ளுடன் - நெருங்­கிய உறவைப் பேணு­வது பெற்­றோ­ரது கட­மை­யாக இருக்க வேண்டும். ஸ்மார்ட்ஃ­போன்­களைப் பிள்­ளை­க­ளிடம் இருந்து பறித்­தெ­டுத்தால் பிரச்­சினை முடிந்­தது என்று நினைப்­பீர்­க­ளானால் அதைப் போன்ற ஒரு அறி­வி­லித்­தனம் வேறெ­துவும் இருக்க முடி­யாது! 

வயது வந்த பெண் பிள்­ளை­களைத் தொட்டுப் பேசு­வதைத் தவிர்க்க நினைக்கும் தந்­தையர் தமது எண்­ணத்தைச் சற்று மீள்­ப­ரி­சீ­லனை செய்­வது அவ­சியம்! பாலியல் பற்­றியோ, பகி­டி­வதை பற்­றியோ, வீதி­யோர ரோமி­யோக்கள் பற்­றியோ பிள்­ளைகள் பேசும்­போது அவற்றைத் தவிர்க்க நினைக்கும் பெற்­றோரின் மனோ­பாவம் மாற வேண்டும். 

‘எந்த விடயம் பற்­றியும் என் பெற்­றோ­ருடன் பேசலாம், விவா­திக்­கலாம்’ என்ற வெளி உரு­வாக்­கப்­ப­டு­மி­டத்து பிள்­ளை­களின் சுய பாது­காப்பு குறித்துப் பெரிதும் கவ­லை­கொள்ள வேண்­டி­யி­ராது.

ஆண் பிள்­ளை­களின் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

ஒரு­வேளை தனது மகன், நண்பி அல்லது காதலி ஒருத்தியின் நிர்வாணப் புகைப்படத்தைக் கசியவிட்டு அது கண்டுபிடிக்கப்பட்டால், ‘படத்தை அனுப்பிய பெண்ணைக் கண்டியுங்கள்’ என்றும், ‘அந்தப் பெண் ஒழுக்கமானவளாக இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது’ என்றும், ‘இப்படியெல்லாம் படத்தை அனுப்பும் அந்தப் பெண் எப்படிப்பட்டவளோ?’ என்று விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும். அந்தப் பெண் வைத்திருக்கும் நம்பிக்கையை தங்கள் மகன் உடைத்துவிட்டதை முதலில் ஒத்துக்கொள்ள வேண்டும். தங்கள் மகன் மீது அந்தப் பெண் கொண்டிருக்கும் காதலின் அளவைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவோ, தவிர்க்கவோ ஆண்- பெண் இருபாலரதும் பெற்றோரும் ஒன்றிணைந்து செயற்படுவது தவிர்க்கப்பட முடியாதது. 

பெண்ணின் கௌரவத்தை, அவளது ஆளுமையைத் தங்கள் மகன்களிடம் தெளிவுபடுத்தவேண்டியது ஒவ்வொரு தாயினதும் கடமை என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது. 

ஆண்- பெண் பால் பேதமே இந்தப் பிரச்சினையின் அடி நாதம் என்பதால் பால் சமத்துவத்தை நம் பிள்ளைகளிடம் புரியவைப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். இதில் கல்வித் துறையும் கவனம் செலுத்த வேண்டும்.