முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தலைமையில் வடக்கு, கிழக்கை இணைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்னும் பெயருடன், இக்கட்சி இயங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு, நேற்று மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள போக்கஸ் விடுதியில் நடைபெற்றது. மட்டக்களப்பில் இயங்கிவரும் நாம் திராவிடர் கட்சியும், இதன்போது தமது ஆதரவைப் புதிய கட்சியின் உருவாக்கத்துக்கு வழங்கியுள்ளது.

முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் நடைபெற்ற இதன் அங்குரார்ப்பண நிகழ்வின்போது, கட்சியின் பொதுச்செயலாளராக மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பின் தலைவர் வி.கமலதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சினை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளவும் மட்டக்களப்பில் கட்சி அலுவலகம் திறப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

வடகிழக்கில் உள்ள முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார திட்டங்களை முன்னெடுக்கும் வகையிலும் கணவனை இழந்துள்ள பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டினை மேற்கொள்ளும் வகையிலும், இக்கட்சி செயற்படவுள்ள அதேவேளை, வடகிழக்கில் அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடவுள்ளதாகவும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.