அமெரிக்காவுடனான நட்பைப் புதுப்பிக்கக் காத்திருக்கும் ரஷ்யா, அதற்குப் பரிசாக ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்திருக்கும் சர்ச்சைக்குரிய அமெரிக்க உளவாளி எட்வர்ட் ஸ்னோடென்னை அமெரிக்காவிடம் கையளிக்கவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரியான எட்வர்ட் ஸ்னோடென், அமெரிக்காவின் கண்காணிப்புப் பொறிமுறைகள் பற்றிய ஆயிரக்கணக்கான தகவல்களைக் கசியவிட்டவர். அமெரிக்க அரசின் தண்டனையில் இருந்து தப்புவதற்காக ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்தார் ஸ்னோடென்.

 தற்போது ரஷ்யாவிலேயே தங்கியிருக்கும் ஸ்னோடென் பற்றி தனது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்ட ட்ரம்ப், ஸ்னோடென்னை துரோகி என்றும் தான் ஜனாதிபதியாக இருந்தால் ஸ்னோடென்னை ரஷ்யா அமெரிக்காவிடம் கையளித்திருந்திருக்கும் என்றும், ஸ்னோடென் தண்டிக்கப்படவேண்டியவர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதன்படி, ரஷ்யாவுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்க விரும்பும் அமெரிக்காவின் முயற்சிக்குப் பரிசாக, ஸ்னோடென்னை அமெரிக்காவிடம் கையளிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்னோடென் அமெரிக்காவிடம் கையளிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படலாம் எனத் தெரியவருகிறது.

எனினும் இதுபற்றி அமெரிக்காவோ, ரஷ்யாவோ உத்தியோகபூர்வமாக எவ்வித அறிக்கையையும் இதுவரை வெளியிடவில்லை.