மலர்ச்சாலையில் நிகழ்ந்த குளறுபடி; தந்தையின் விருப்பை நிறைவேற்ற முடியாமல் போன மகள்!

Published By: Devika

11 Feb, 2017 | 02:22 PM
image

மலர்ச்சாலை ஒன்றில் நடந்த குளறுபடியால், வெறும் சவப்பெட்டியொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் மெய்ன் மாகாணத்தின் பேங்கர் நகரைச் சேர்ந்தவர் டேவிட் பஃவ். நீண்ட காலம் புற்றுநோயால் அவதிப்பட்டுவந்த இவர் 58 வயதில் அண்மையில் காலமானார்.

தனது நோய் பற்றி அறிந்திருந்த டேவிட், தனது இறப்புக்குப் பின் தன் உடலை ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் புதைக்க வேண்டும் என்று விரும்பினார். அதன்படியே அவர் இறந்ததும் அவரது விருப்பத்தை நிறைவேற்ற உறவினர்கள் தயாராயினர். ஆனால் நடந்ததோ வேறு!

அலங்காரம் செய்வதற்காக மலர்ச்சாலை ஒன்றுக்கு டேவிட்டின் உடலை அவரது மனைவியும் மகளும் அனுப்பி வைத்தனர். மறுநாள் காலை டேவிட்டின் வீட்டுக்கு வந்த மலர்ச்சாலை அதிகாரியொருவர், டேவிட்டின் உடலை தவறுதலாக வேறொரு குடும்பத்திற்கு அனுப்பிவிட்டதாகவும், அவர்கள் அந்த உடலை எரித்துவிட்டதாகவும் கூறினர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த டேவிட்டின் மனைவியும் மகளும், இறுதிக் கிரியைகளுக்காக தேவாலயத்தில் உறவினர்கள் காத்திருந்ததால் செய்வதறியாது திகைத்தனர்.

கடைசியில் வேறு வழியின்றி வெற்றுச் சவப்பெட்டியொன்றைக் கொண்டு வந்து தேவாலயத்தின் மயானத் தோட்டத்தில் புதைத்தனர். அது வெற்றுப்பெட்டி என்பது டேவிட்டின் மனைவி மற்றும் மகள் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

இதுபற்றிக் குறிப்பிட்ட டேவிட்டின் மகள், “வெற்றுப்பெட்டியைப் புதைத்தது கூட எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் நானும் அம்மாவும் இல்லாமலேயே, யாரென்று தெரியாத சிலரால் எனது அப்பாவின் உடலுக்கு ஈமச்சடங்கு செய்யப்பட்டதுதான் வேதனையாக இருக்கிறது” என்று வருத்தம் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right