நாட்டில் நிலவி வரும் வரட்சியான காலநிலையையடுத்து நீர் மின்வலு உற்பத்தி 10 சதவீதம் வீழ்ச்சியடைந்திருப்பதாக மின்வலு மற்றும் மின் புத்தாக்க அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய மேற்படி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷனா ஜயவர்தன, தற்போது நாடு எதிர்கொள்ளும் மின் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு பொதுமக்கள் மின்சக்தியை சிக்கனமாகப் பயன்படுத்தும்படியும், இதன்மூலம் தற்போதைய காலநிலை சீராகி போதியளவு மின் உற்பத்தி ஆரம்பிக்கப்படும் வரை தொடர்ச்சியான மின்சக்தியை அனைவருக்கும் வழங்க முடியும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சின் இந்த அறிவிப்பால், தொடர்ந்து வரட்சியான காலநிலை நிலவும் பட்சத்தில் மக்கள் மின்தடைக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழல் எழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, சில வாரங்களுக்கு முன்பிருந்தே நாட்டின் வரட்சி நிலையைச் சுட்டிக்காட்டி மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும்படி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துவருகிறார். மேலும், பெருநிறுவனங்கள் தமது விளம்பரப் பதாதைகளின் மின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளும்படியும் அவர் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.