எனது ஆட்சியில் மலையகத்தில் தனி வீடுகளை அமைக்க அதிகமான நிதிகள் ஒதுக்கப்பட்டும் வீடுகள் அமைக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

தலவாக்கலை நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற வைபவத்தில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் லயன் முறை வாழ்க்கையிலிருந்து வெளியே வர வேண்டும் என்பதற்காகவே 1994ஆம் ஆண்டு எனது அரசாங்கத்தில் தோட்ட உட்கட்டமைப்பு என்ற புதிய அமைச்சினை உருவாக்கினேன்.

மறைந்த மலையகத்தின் தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமானிடம் மலையக மக்களுக்கு தனி வீடு திட்டத்தை செய்யுங்கள் என நான் வேண்டுக்கோள் விடுத்தேன். எனினும் 20 வருடங்களுக்கு பிறகு எனது கனவு நனவாகியுள்ளது.

மலையக பெருந்தோட்ட பகுதியில் வாழ்கின்ற தொழிலாளர்களுக்கு தனி வீடுகளை அமைப்பதற்காக எனது அரசாங்க காலத்தில் அதிகபட்ச நிதி தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கு வழங்கப்பட்டது.

ஆனால் தனி வீடுகளை அமைப்பதற்காக காணிகள் பெறுவதில் சிக்கல்கள் இருப்பதாக அன்றைய அமைச்சர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

ஆனால் பெருந்தோட்ட நிர்வாகங்களை நிர்வகிக்கும் கம்பனிகாரர்களிடம் பேசி காணிகளும், பெற்றுக்கொள்ள வழிவகுக்கப்பட்டது. ஆனால் வீடுகள் கட்டடிகொடுக்கவில்லை. இன்று இந்த அரசாங்கத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஊடாக தனி வீடுகள் அமைக்கும் திட்டம் நிறைவேற்றம் அடைந்து வருகின்றது.