காப்புறுதித் தொகையைத் தன் குடும்பத்துக்குப் பெற்றுத் தருவதற்காக தனது தற்கொலையை கொலையாகக் காட்ட ஒருவர் முயற்சித்த சம்பவம் மும்பையில் இடம்பெற்றுள்ளது.

சதீஷ் என்பவர் ஒரு நகை வியாபாரி. தனது வியாபாரத்துக்காக வங்கி ஒன்றில் ஐந்து இலட்ச ரூபாயை சதீஷ் கடனாகப் பெற்றிருந்தார். எனினும், எதிர்பார்த்தபடி வியாபாரம் செழிக்காததால், கடனைத் திருப்பிச் செலுத்த வழியில்லாமல் தவித்தார். இதனுடன் தொழிலுடன் தொடர்புடைய வேறு பல சிக்கல்களும் சதீஷுக்கு ஏற்பட்டன.

இந்த நிலையில், தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என நினைத்த சதீஷ், தற்கொலை செய்துகொண்டால் தான் செய்திருக்கும் காப்புறுதிப் பணம் கிடைக்காது என நினைத்தார். இதனால், தனது தற்கொலையை ஒரு கொலையாகச் சித்திரிக்க முடிவுசெய்தார்.

அதன்படி, விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கிய சதீஷ், தனது உதவியாளர்கள் இருவரை அங்கு வரச் சொன்னார். அவர்கள் வந்ததும், கட்டிலில் தனது கைகளைக் கட்டிவைத்து வெட்டி விடுமாறு கூறியிருக்கிறார். அதற்கு அவர்கள் மறுத்தபோதும், சதீஷின் வற்புறுத்தலின் பேரில் அவர்கள் அதற்குச் சம்மதித்தனர்.

அதன்படி, கைகளை வெட்டிய பின்னர், மின்விசிறியில் கயிறைக் கட்டி தூக்கிலிட்டுவிடும்படியும் கூறியுள்ளார். அதனையும் நிறைவேற்றிய சதீஷின் உதவியாளர்கள், பின்னர் யாருக்கும் தெரியாமல் விடுதியில் இருந்து வெளியேறினர்.

இந்தக் கொலை தொடர்பாக ஆராய்ந்து வந்த பொலிஸார், விடுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில், சதீஷின் உதவியாளர்கள் தவிர வேறு எவரும் அங்கு வந்து செல்லாததைக் கண்டு, சந்தேகத்தின் பேரில் அவர்களைக் கைது செய்தனர். அதன்போதே நடந்த விடயம் அம்பலமானது.

இதையடுத்து, சதீஷின் உதவியாளர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.