இலங்கை போக்குவரத்துச் சபை கம்பளை கிளையினால் அட்டனுக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பஸ் சேவையினை நிறுத்துமாறு கண்டியைச் சேர்ந்த தனியார் பேருந்து சாரதிகள் சிலர். அச்சுறுத்தல் விடுத்து வருவது தொடர்பாக மாத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

அட்டன் யாழ்ப்பாணம் பஸ் சேவை இலங்கை போக்குவரத்துச் சபை கம்பளை கிளையின் முகாமையாளரினால் ஜனவரி முதலாம் திகதி கம்பளை பஸ் நிலையத்தில் சம்பிரதாயப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த பஸ் சேவையினை உடனடியாக நிறுத்துமாறு கண்டிக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையில் சேவையில் ஈடுபட்டு வந்த தனியார் பேரூந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களும் குறித்த பஸ்ஸின் சாரதிக்கும் நடத்துனருக்கும் அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து குறித்த பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது குறித்த பஸ்வண்டி மாத்தளை பகுதியினூடாக பயணித்துக் கொண்டிருந்த சமயம் பொல்லு கத்திகளுடன் கெப்ரக வாகனமொன்றில் வந்த ஒரு குழுவினர் குறித்த பஸ்ஸினை இடைமறித்து அதன் சாரதியினையும் நடத்துனரையும் தாக்க முற்பட்ட சமயம் உடனடியாக பஸ் வண்டி மாத்தளை பொலிஸ் நிலையத்திற்கு திருப்பப்பட்டு அங்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாத்தளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.