சசிகலா அதிமுக இடைக்கால பொதுச்  செயலாளராக பதவி வகிக்க முடியாது என தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதிமுகவின் சட்டவிதிகளின் படி உரிய திருத்தம் மேற்கொண்டால் மட்டுமே இடைக்கால பொதுச்  செயலாளர் என ஒருவரை நியமிக்க முடியும். அப்படி செய்யாமல் பொதுச்செயலர் ஒருவரை அதிமுகவில் நியமிக்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

கட்சியின் பொதுக்குழுவில் பொதுச்  செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். அதிமுக சட்டவிதிகளின் படி பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி அதிமுக உறுப்பினர்களும் வாக்களித்தால் மட்டுமே, ஒருவர் பொதுச் செயலராக தெரிவாக முடியும்.

இந்நிலையில் கட்சி விதிமுறைகளை மீறி, சசிகலாநடராஜன் அதிமுக பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதால், அவரது நியமனம் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விடயங்களை குறிப்பிட்டு  சசிகலா நடராஜன் தற்காலிக பொதுச் செயலாளராக தெரிவானது, செல்லுபடியாகாது என தேர்தல் ஆணையம் அறிவித்து சசிகலாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்ததாகவும், விரைவில் அவருக்கெதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

அத்தோடு 1972ஆம் ஆண்டு எம்ஜி.ஆர், திமுகவின் பொதுக்குழு உறுப்பினர்களால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதனால் அதிமுகவை தொடங்கிய எம்ஜி.ஆர், பொதுக்குழு உறுப்பினர்கள் தவிர்த்த கட்சியின் அடிப்படை உறுப்பினர்களும் இணைந்தே கட்சியின் பொதுச்செயலாளரை தெரிவு செய்ய வேண்டும் என கட்சியின் விதியை உருவாக்கினார்.

செல்வி ஜெயலலிதாவால்,  அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சசிகலா நடராஜன் நீக்கப்பட்டார். அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து சசிகலாவை மன்னித்து ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார். அதற்கு பிறகு அதிமுகவில் அவர் இணைந்தாரா? என்பது தெரியவில்லை. 

அதிமுக விதிகளின் படி ஒருவர் 5 ஆண்டுகளாக கட்சி உறுப்பினராக இருந்தால் மட்டுமே கட்சி பதவிகளுக்கு வர முடியும். இதன்படி சசிகலாவால் அதிமுக பொதுச்  செயலாளராக முடியாது. அத்தோடு குறித்த நியமனம் செல்லுபடியற்றதாகவே கருத்திற் கொள்ளப்படுமென, தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.