இங்கிலாந்தில், ஆசிரியர்களுக்கு அடங்கி நடக்காத, பாடசாலை விதிமுறைகளுக்கு மாறாக நடந்துகொள்ளும் மாணவர்களை அடையாளம் கண்டுகொள்வதற்காக ஆசிரியர்களுக்கு அணிந்துகொள்ளக்கூடிய வீடியோ கெமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தின் இரண்டு மாகாணங்களில் மூன்று மாத காலங்களுக்கு பரீட்சார்த்தமாக இந்த வீடியோ கெமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

பாடசாலைகளில் இந்நாட்களில் மாணவர்களால் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆசிரியர்கள் முகங்கொடுப்பதாகவும், இதனால் கற்றல் நடவடிக்கைகளில் ஆசிரியர்களால் கவனம் செலுத்த முடியாதுள்ளதாகவும் புகார்கள் எழத் தொடங்கியுள்ளன.

இதைத் தடுக்கும் முகமாகவே இந்தத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. இதற்கு முன்னோடியாக அடுத்த மூன்று மாதங்களுக்கு, இங்கிலாந்தின் இரண்டு மாகாணங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்த வீடியோ கெமராக்கள் வழங்கப்படவுள்ளன.

இந்தக் கெமராக்கள் மூலம் வகுப்பறைகளில் ஏதேனும் அனர்த்தம், அசம்பாவிதம் நடந்தால் மட்டும் அதை இயக்கும் வகையில் ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த முயற்சி பற்றி பெற்றோருக்கும் மாணவருக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதென்றும், இந்த முயற்சி குறித்த அவர்களது கருத்துக்களையும் வரவேற்பதாகவும் கல்வி நிர்வாகம் அறிவித்துள்ளது.