பதவிக்காலம் நிறைவடைந்து வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு குறுகிய கால விடுமுறையை பிரித்தானியாவின் வேர்ஜின் தீவுகளில் கழித்து வருகிறார்.

தனது குடும்பத்தினருடன் அங்கு சென்றிருக்கும் ஒபாமா, தனது நீண்ட கால நண்பரும் பெரும் செல்வந்தருமான ரிச்சர்ட் பிரான்சன் குடும்பத்தினருடன் இணைந்து இந்த விடுமுறையைக் கழித்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக காற்றாடி மூலம் நீர்ச்சறுக்கும் பயிற்சிகளில் ஒபாமா ஈடுபட்டார். அந்தக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலங்களில் சுதந்திரமாக இதுபோன்ற விளையாட்டுக்களில் ஈடுபட, பாதுகாப்பு அதிகாரிகளின் ஒப்புதல் கிடைக்காததால் தவித்து வந்த ஒபாமா, தற்போது அந்தக் குறைகளைத் தீர்த்துக்கொள்ளும் வகையில் இதுபோன்ற விளையாட்டுக்களில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியின்போது, ஒபாமாவும், பிரான்சனும் நட்பு ரீதியான பந்தயம் ஒன்றில் ஈடுபட்டனர். அதன்படி, காற்றாடி மூலம் யார் நீண்ட தூரம் நீரில் சறுக்கிச் செல்வது என்ற போட்டியில் இருவரும் ஈடுபட்டனர். இதற்காக முழுமூச்சாகப் பயிற்சியும் எடுத்துக்கொண்டார் ஒபாமா.

நேற்று இந்தப் பந்தயம் இடம்பெற்றது. பிரான்சன் 50 மீற்றர் தொலைவு மட்டுமே நீரில் சறுக்கிச் செல்ல, ஒபாமாவோ 100 மீற்றர் தொலைவுக்கு காற்றாடியின் உதவியுடன் நீரில் சறுக்கிச் சென்றார். இதன்படி பந்தயத்தில் ஒபாமா வெற்றிபெற்றார்.