கட்டாயப்படுத்தியே என்னை இராஜிநாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் இராஜிநாமா கடிதத்தை திரும்பப்பெறுவேன் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

மெரீனாவில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதிக்கு முன்னால் 40 நிமிடங்களுக்கு மேல் மௌன அஞ்சலி செலுத்திய பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கட்சியை நினைத்து தொண்டர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

புரட்சித் தலைவி அம்மாவினுடைய ஆன்மாவே தொண்டர்களுக்கு அறிவிக்குமாறு உந்துதல் அளித்தது.

அம்மாவினுடைய வாக்குறுதியை நிறைவேற்றவே பதவியில் இருந்தேன்.

எனது மனச்சாட்சி உருத்தியதாலேயே இங்கு வந்தேன்.

கருத்து வேற்றுமைகளை தவிர்க்கவே ஆட்சியில் அமர்ந்தேன்.

நாட்டு மக்களுக்கு உண்மையை சொல்ல ஜெயலலிதாவின் ஆன்மா உதவிவிட்டது.

அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டனே பொதுச்செயலாளராக இருக்க வேண்டும்.

ஆட்சியில் அமர வைத்து என்னை அவமானப்படுத்துகின்றனர்.

தனிப்பட்ட முறையில் இகழ்ச்சி செய்தால் நான் கவலைப்பட்டதில்லை.

எனது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. 

கட்டாயப்படுத்தி தான் இராஜிநாமா கடிதத்தில் கையொப்பம் பெற்றனர்.

இதை தெரியப்படுத்தவே இங்கு வந்தேன்.

கட்சிக்காக தன்னந்தனியாக இறுதி வரை போராடுவேன்.