அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவால் விடுவிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் கைதியொருவர் மீண்டும் அதே குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

1992ஆம் ஆண்டு, ரொபர்ட் எம்.கில் (68) என்பவர் மீது சுமத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு நிரூபணமானதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்த பொதுமன்னிப்பின் பேரில் 1,385 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுள் இவரும் ஒருவர்.

இந்த நிலையில், கடந்த வாரம் 500 கிராமுக்கும் மேற்பட்ட கொக்கைன் போதை மருந்தை வினியோகிக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ரொபர்ட் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டு நிரூபணமானால் ஐந்து முதல் நாற்பது வருட சிறைத் தண்டனை கிடைக்கலாம் எனத் தெரியவருகிறது.

ரொபர்ட்டை விடுதலை செய்யும் கடிதத்தில், “மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் என்ற உங்களது உறுதியின் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் விடுவிக்கப்படுகிறீர்கள். இந்த வாய்ப்பைத் தகுந்த முறையில் பயன்படுத்திக்கொள்வது உங்கள் கையிலேயே உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.