தோட்ட தொழிலாளர்களின் புதிய சம்பள உயர்வானது ஏமாற்றத்திற்குரிய விடயம் என தோட்ட நிர்வாகங்களின் செயற்பாடுகளிலிருந்து தெரியவந்துள்ளது. 730 ரூபாய் சம்பளம் என புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டு 590 ரூபாய் சம்பளத்தை தோட்ட நிர்வாகங்கள் வழங்கி வருவதன் மூலம் சம்பள ஒப்பந்தமானது வெறும் கண் துடைப்பாகும் என்பது புலனாகிறது.

இதனை வன்மையாக கண்டிப்பதுடன், புதிய சம்பள ஒப்பந்தத்திற்கு தமது எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் கோரி நானுஓயா உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள்  இன்று மதியம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள்,  தோட்ட தொழிற்சாலைக்கு அருகாமையில் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது புதிய சம்பள ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தோட்ட நிர்வாக செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பதாதைகளை ஏந்தியவண்ணம், எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு தோட்ட தொழிலாளர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் “730 அடிப்படை சம்பளம் தோட்ட தொழிலாளிக்கு கிடைப்பதில்லை, 620 ரூபாய் சம்பளம் போதுமானது, மலையகத்தில் வறட்சி காலத்தில் கூட அரசிடம் இருந்து எந்தவித நிவாரணமும் கிடைப்பதில்லை, இந்த நிலையை மலையக அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்வதில்லை, சம்பள பேச்சுவார்த்தையின் பின் 18 கிலோ என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது” போன்ற பதாதைகளை ஏந்தி நின்றமை குறிப்பிடத்தக்கது.