அமெரிக்காவில் மதத்தின் அடிப்படையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு ஏற்றவகையிலான, சட்டமூலம் ஒன்றை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

மத அமைப்புகள், மதம் சார்ந்த அறக்கட்டளைகள், தேவாலயங்கள் என்பன தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்கு, அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடிப்படை மதவாதம் நிறைந்த குறிப்பிட்ட சில கிறிஸ்தவ அமைப்புகளின் வேண்டுகோளிற்கிணங்கவே, டிரம்ப் குறித்த சட்டமூலத்தை நடைமுறை படுத்தவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் குறித்த சட்டவாக்கம் பற்றி குறிப்பிட்டுள்ள டிரம்ப், அமெரிக்காவில் மத உரிமை மற்றும் மத சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அதற்கான தீர்வை ஏற்படுத்தவுள்ளதாக, ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சட்டவாக்கம் தொடர்பான முன் வரைபுகளின் படி, தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மதத்தின் அடிப்படையில் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கலாம். மத அமைப்புகள் அரசியலில் ஈடுபடும் அனுமதி, ஒவ்வொரு மத அமைப்பினரும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கலாம். அத்தோடு விருப்பத்திற்கேற்ப நிதியுதவிகளை செய்யலாம். எனும் அடிப்படையில் அமைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு மெக்ஸிகோ எல்லையில் சுவர், அகதிகள் மற்றும் குறிப்பிட்ட 7 நாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள், அமெரிக்கா வருவதற்கு தடை என அடுத்தடுத்து சர்ச்சைகளை ஏற்படுத்திவரும் டிரம்ப், தற்போது ‘மதச் சுதந்திரம்’ எனும் அடிப்படையில் புதிய சட்டவாக்கத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

குறித்த சட்டவாக்கத்தின் மூலம் அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள, ஓரின சேர்க்கையாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, மதவாத கொள்கைகள் புகுத்தப்பட்டிருப்பதாகவும் குறித்த தரப்பினரால் நேரடியான குற்றச்சாட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளையும் தாண்டி, குறித்த மத சார்பான சட்டவாக்கத்தை ஜனாதிபதி டிரம்ப், மிக விரைவில் நடைமுறை படுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.