ஈரான் மற்றும் அந்நாட்டின் ஏவுகணை பரிசோதனைக்கு உதவியதாக கூறப்படும் 25 தனி நபர்களுக்கெதிராக, அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. 

குறித்த தடை உத்தரவிற்கமைய சீனா, லெபனான், ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகளிலுள்ள பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த 25 தனிநபர்களை குறிவைத்ததாக குறித்த தடை உத்தரவு அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

அமெரிக்காவின் விசா தடை உத்தரவிற்கு பதிலடியாக, ஈரான்  வருவதற்கு  அமெரிக்கர்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டது. மேலும் டிரம்ப் அரசியலுக்கு புதியவர் என ஈரானிய ஜனாதிபதி ஹசன் ருஹானி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஈரான் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை ஒன்றை,  ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை  மீறி பரிசோதனை செய்தது. இதனால் ஈரான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது. 

மேலும் ‘ஈரான் நெருப்புடன் விளையாடுகிறதாகவும், ஒபாமாவை போல் தான் அல்ல என்பதை ஈரான் புரிந்துகொள்ள வேண்டும்' என தனது சமூக வலைதள பதிவின் மூலம் அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையிலேயே ஈரான் மீது புதிய பொருளாதார தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.