ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற அனுமதி பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த பிரெக்ஸிட் மசோதாவிற்கு அந்நாட்டு பாராளுமற்றத்தின் கீழ்சபையில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 29 நாடுகளின் கூட்டணியிலிருந்து வெளியேறுவது தொடர்பாக, பிரிட்டனில் கடந்த ஜூனில் பொது தேர்தல் ஓன்று நடத்தப்பட்டது. அதில் 52 சதவீதமான பிரிட்டன் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். 

குறித்த விடயம் தொடர்பாகவே முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் பதவி விலகி, புதிய பிரதமராக தெரசா மே பதவியேற்றார். இந்நிலையில் கூட்டணியிலிருந்து வெளியேறுவது தொடர்பான, பிரெக்ஸிட் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரி பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர் ஜினா மில்லர் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்றை தொடர்ந்தார்.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், பிரெக்ஸிட் நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியமென தீர்ப்பளித்தனர். 

அதனால் பிரெக்ஸிட் வரைவு மசோதாவை அந்நாட்டு பாராளுமன்றின் கீழ்சபையில் தாக்கல் செய்தது. குறித்த மசோதா மீது நேற்று முன்தினம் நடந்த நீண்ட விவாதத்தை தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெற்றது.

குறித்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 498 பேரும் எதிராக 114 பேரும் வாக்களித்துள்ளனர். மேலும் அடுத்த கட்டமாக பாராளுமன்றத்தின் மேல் சபையான பிரபுக்கள் சபையில் இடம்பெறும் வாக்கெடுப்பை தொடர்ந்து,  மார்ச் இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் முழுமையாக வெளியேறிவிடும் என சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.