ட்விட்டர் மூலம் உலகப் பிரசித்தி பெற்றிருக்கும் சிரியச் சிறுமியான பானா அலபெத், தனது கேள்விகளால் ட்ரம்ப்பைத் திணறடித்திருக்கிறார்.

சிரியாவைச் சேர்ந்த பானா அலெப்போவில் வாழ்ந்து வந்தவர். அலெப்போவில் சிரிய கூட்டுப்படைகளுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற உக்கிரமான மோதலின்போது, தனது வயதுக்கேயுரிய கருத்துக்களை ட்விட்டர் மூலம் பகிர்ந்து உலக கவனம் ஈர்த்தார்.

தாக்குதலில் தரைமட்டமான அவரது வீட்டைப் படம் பிடித்து, ‘எமது வீடு அழிந்துவிட்டது. இன்று நாம் எங்கே தூங்கப்போகிறோம் என்று தெரியவில்லை’ என்று ட்விட்டரில் பானா தெரிவித்த கருத்து, உலக மக்களை உலுக்கியது. இதையடுத்து பல இலட்சக்கணக்கான ட்விட்டராட்டிகள் பானாவின் இரசிகர்கள் ஆனார்கள்.

நடுவில் சில நாட்கள் பானாவின் ட்வீட்களைக் காணாத அவர்கள், பானாவுக்கு என்ன ஆனதோ என்று பதைபதைத்துப் போனார்கள். தற்போது பானா, ட்ரம்ப்பின் அதிரடித் தடை குறித்து அவரிடமே ட்விட்டர் மூலம் ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார்.

அதில், “நீங்கள் எப்போதாவது ஒரு நாள் முழுவதும் உணவோ, தண்ணீரோ இல்லாமல் இருந்திருக்கிறீர்களா? சிரியாவின் அகதிகளையும் அவர்களது குழந்தைகளையும் சற்று நினைத்துப் பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏழு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டபோது, அதற்கு பதிலாக, “நான் சிரிய நாட்டைச் சேர்ந்தவள். அப்படியானால் நானும் பயங்கரவாதியா? அன்பின் ட்ரம்ப், அகதிகளுக்கு அனுமதி மறுப்பது மிகத் தவறு. அதன் மூலம் நல்லது நடக்கும் என்றால், உங்களுக்கு நான் ஒரு ஆலோசனை சொல்கிறேன். (எங்களை விட்டு விடுங்கள்) மற்ற நாடுகளில் அமைதியை ஏற்படுத்துங்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.