முல்லைத்தீவு, கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் அமைந்துள்ள பகுதியில் அப்பகுதி மக்களினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது நேற்று இரவும் கொட்டும் பனியிலும் இரவிரவாக இன்று நான்காவது நாளாக தொடர்ந்த வண்ணமுள்ள நிலையில் ஒருவர் மயக்கமுற்று ஆபத்தான நிலையில் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

விமானப்படையினர் வசமுள்ள 30 ஏக்கர் காணியை விடுவிப்பதாக அரச அதிகாரிகள் மக்களுக்கு தெரிவித்தபோதிலும் அது குறித்த தினத்தில் விடுவிக்கப்படவில்லை. இதன்காரணமாக குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள் என 50 க்கும் மேற்பட்ட கேப்பாப்புலவு குடியிருப்புமக்கள் தொடர் போராட்டத்திலீடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, உணவு, தண்ணீர் மற்றும் உறக்கமின்றி இப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளதால் அவர்களுக்கு மருத்துவ உதவிகள் தேவைப்படுவதாகவும் இதனால் ஒருவர் மயக்கமுற்ற நிலையில் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்யடுத்து தொடர்போராட்டமாக இன்று நான்காவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று இரவு சம்பவ இடத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின தலைவர் ஆனந்தசங்கரி மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் சென்று மக்களின் நிலைமைகளை நேரடியாக கண்காணித்தனர்.