இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இ-20 போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நிருபர் ஒருவரது கேள்விக்கு அதிரடி பதிலளித்து அவரது வாயை மூடச் செய்தார் கோலி!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் இ-20 ஆகிய மூன்று தொடர்களிலும் இந்தியா வெற்றி வாகை சூடியது. மூன்று போட்டித் தொடர்களுக்கும் விராட் கோலியே தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது.

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான இ-20 போட்டியில் இந்தியா 75 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து ஊடக சந்திப்பொன்று நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட ஒரு நிருபர், ‘ஆரம்பத் துடுப்பாட்டக்காரராக உங்களது திறமை ஜொலிக்கவில்லையே?’ என்று கோலியிடம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த கோலி, “ஐ.பி.எல். போட்டிகளில் ஆரம்ப வீரராகக் களமிறங்கி நான்கு சதங்களை விளாசியிருக்கிறேன். அப்போது அதைப் பற்றி நீங்கள் எதுவும் பேசவில்லை. ஆனால் குறைவான ஓட்டங்களைப் பெற்றதும் அது உங்களுக்கு ஒரு பிரச்சினையாகிவிட்டது, அல்லவா?” என்று பதில் கேள்வி கேட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “ அணியில் என்னைத் தவிர மேலும் பத்துப் பேர் விளையாடுகிறார்கள். அவர்களைப் பற்றியும் சற்றுக் கரிசனை செய்யுங்கள். எல்லா வேலைகளையும் நானே செய்துவிட்டால், மீதிப் பத்து வீரர்கள் என்னதான் செய்வது?

“இந்தப் போட்டியில் ஆரம்ப வீரராக எனது ஆட்டத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இந்தப் போட்டிகளில் 70 ஓட்டங்களைப் பெற்றிருந்தால் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டே இருக்க மாட்டீர்கள், அல்லவா? எனது ஆட்டத்தைப் பற்றிக் கேள்வி கேட்பதை விட்டுவிட்டு இந்திய அணி பெற்றிருக்கும் இந்த வெற்றியை நீங்களும் கொண்டாடுங்கள்” என்று கூறினார் கோலி!