கேரளாவில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் அவரது முன்னாள் காதலரால் கல்லூரி வளாகத்திலேயே துரத்தித் துரத்தி தீ வைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கோட்டயம் நகரைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி லக்ஷ்மி (20). இவரும், அதே கல்லூரியின் பழைய மாணவரான ஆதர்ஷும் (26) காதலர்கள். ஆனால், சில காரணங்களால் ஆதர்ஷுடனான காதலை முறித்துக் கொண்டார் லக்ஷ்மி.

இதனால் கடும் கோபம் கொண்ட ஆதர்ஷ், லக்ஷ்மியைப் பழிவாங்க தக்க தருணத்துக்காகக் காத்திருந்தார்.

இந்நிலையில் நேற்றுக் காலை குறித்த கல்லூரியின் சார்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. பெரும்பாலான மாணவர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்றுவிட்டார்கள். மிகச் சில மாணவர்களே கல்லூரியினுள் இருந்தனர். லக்ஷ்மி தனது சக நண்பியருடன் வகுப்பறையின் வெளியே அமர்ந்திருந்தார்.

அப்போது, திடீரெனக் கல்லூரியினுள் நுழைந்த ஆதர்ஷ், லக்ஷ்மியை நெருங்கிச் சென்று தன் கையில் வைத்திருந்த கொள்கலனைத் திறந்து பெற்றோலை லக்ஷ்மி மீது ஊற்றினார். அதிர்ச்சியில் இருந்து மீண்ட லக்ஷ்மி, அசம்பாவிதத்தை சில நொடிகள் தாமதமாகப் புரிந்துகொண்டதும் அங்கிருந்து தப்பியோட ஆரம்பித்தார்.

எனினும், லக்ஷ்மியைத் துரத்திச் சென்ற ஆதர்ஷ், கல்லூரி வளாகத்தின் மத்தியில் வைத்து லக்ஷ்மியை எட்டிப் பிடித்தார். உடனே, கையில் இருந்த லைட்டரால் லக்ஷ்மி மீது தீயைப் பற்ற வைத்தார். பின்னர் தன் மீதும் பெற்றோலை ஊற்றித் தீ வைத்துக்கொண்டார்.

கல்லுரி மத்தியில் இரண்டு பேர் பற்றியெரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் சிலர், இருவரையும் காப்பாற்ற முயற்சித்தனர். எனினும் அவர்கள் மீது தீ பற்றியதால் அவர்களும் விலகியோட நேர்ந்தது.

கிடைத்த தகவலின் பேரில் விரைந்து வந்த அம்பியூலன்ஸ் தீப்பிடித்த காயங்களுடன் லக்ஷ்மியையும் ஆதர்ஷையும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது. எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.