அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி  நாடு திரும்பிய மட்டக்களப்பைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தின் அடிப்படையில் அவருக்கான வழக்கு மீண்டும் 2 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புண்ணியமூர்த்தி  சசிகரனுடைய வழக்கு விசாரணை மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குறித்த வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நீதிவான்  கபில துஸ்யந்த பிறப்பித்தார்.

2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்றிருந்த மட்டக்களப்பு மாமாங்கம் பிரதேசத்தைச் சேர்ந்த பு.சசிகரன் அவுஸ்திரேலியாவில்  5 வருடங்கள் தனது பாதுகாப்பு  காரணமாக அங்கு வசித்து  வந்துள்ளார்.  இலங்கையில் புதிய ஆட்சி  மாற்றத்தின் பின் அரசாங்கத்தால் சொந்த நாட்டில் இருந்து இடம்பெயர்ந்த அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் நாட்டுக்கு வந்து தங்களது சேவைகளை தொடருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த அழைப்பின் பிரகாரம் கடந்த 2016 ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் 20 ஆம் திகதி இலங்கை விமான நிலையம்  வந்தடைந்த புண்ணிய மூர்த்தி  சசிகரன், குடிவரவு திணைக்களத்தால் விசாரிக்கப்பட்டு குற்றப்புலனாய்வு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார் .  

குற்றப் புலனாய்வு துறையினரின் அனைத்து விசரணைகளுக்குட்படுத்தப்பட்ட புண்ணியமூர்த்தி  சசிகரன், 28 மணித்தியாலங்கள் விமானநிலைய பாதுகாப்பில் வைக்கப்பட்டு  பின்  நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டு  நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

அவருடைய கடவுச்சீட்டு 5 வருடங்கள் தடை  செய்யப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு மாதமும் ஒருமுறை வருகின்ற இறுதி ஞாயிற்றுகிழமைகளில் கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வுத்துறை அலுவலகத்தில் கையொப்பம் இடும் படியும்  தீர்ப்பு  வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.