படுகொலை செய்யப்பட்ட முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை பற்றி, சிஐஏ என அழைக்கப்படும் அமெரிக்க மத்திய உளவுதுறை அமைப்பு,  5 ஆண்டுகளுக்கு முன்பாகவே கணித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக மேலும் தெரியவந்துள்ளதாவது,

1986 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ‘ராஜீவுக்குப் பிறகு இந்தியா ….’ என்ற தலைப்பில் 23 பக்கங்கள் நிறைந்த அறிக்கை ஒன்றை சிஐஏ தயாரித்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவல்களை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் சிஐஏ வெளியிட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில் தலைப்பின் மீதம் உள்ள வார்த்தைகள் மற்றும் உள்ளடக்கத்தின் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. அத்தோடு ஆரம்ப வரிகளிலே “1989 ஆம் ஆண்டு பதவிக் காலம் முடிவடைவதற்குள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட வாய்ப்புள்ளது” எனவும், அதற்கு பிறகு வரும் வசனங்களில், “ராஜீவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது” எனக்கூறப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் குறித்த அறிக்கையில் ராஜீவின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டால், உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியலில் ஏற்படும் மாற்றம் அதில் அமெரிக்க, ரஷ்ய உள்ளிட்ட நாடுகளுடனான உறவுகளின் தன்மை குறித்து ஆழமாக ஆராயப்பட்டுள்ளன.

எனினும் இந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. அதனால் இலங்கை விடுதலைப்புலிகள் அமைப்பினால் ராஜீவ் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்ததா? என்பது குறித்த விடயங்கள் தெளிவாகத் தெரியவில்லை.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பிரச்சினைகளை ராஜீவ் காந்தி  தீர்ப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் குறித்து ஆழமாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு, 1991ஆம் ஆண்டு மே 21ஆம் திகதி தமிழ் நாட்டின்  ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த ராஜீவ் காந்தி, படுகொலை செய்யப்பட்டார்.

அத்தோடு ராஜீவ் காந்தியிற்கு பிறகு பி.வி.நரசிம்ம ராவ் அல்லது வி.பி. சிங் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாகக் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதற்கமைய 1991 ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் இந்திய பிரதமரானார் என்பது குறிப்பிடத்தக்கது.