ஸ்கொட்லாந்து நூலகத்தில் இருந்து பெறப்பட்ட புத்தகம் ஒன்று, 43 வருடங்களுக்குப் பின் மீண்டும் நூலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கொட்லாந்தின் எழுத்தாளரும், கவிஞருமான எட்வின் முய்ர் என்பவர் பற்றிய புத்தகம் ஒன்றை பி.எச்.பட்டர் என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நூலை ஸ்கொட்லாந்தின் ஓர்க்னி நூலகத்தில் இருந்து 1973ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி ஒருவர் இரவலாகப் பெற்றுச் சென்றிருக்கிறார். எனினும் இந்தப் புத்தகம் திருப்பிக் கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், புத்தகத்தை இரவல் வாங்கியவராகக் கருதப்படுபவரது வீட்டை அவரது குடும்ப உறுப்பினர்கள் சுத்தம் செய்துகொண்டிருக்கையிலேயே இந்தப் புத்தகத்தை அவர்கள் கண்டுள்ளனர். அது திருப்பிக் கொடுக்கப்பட வேண்டியது என்பதை அறிந்து, ஓர்க்னி நூலகத்தில் அதை ஒப்படைத்துள்ளனர்.

43 ஆண்டுகள் கழித்துக் கொடுப்பதனால் எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டி ஏற்படுமோ என்று அவர்கள் தயங்கியபோதும், நூலக நிர்வாகியோ அபராதம் எதையும் விதிக்கவில்லை.

ஆனால், மிகுந்த மதிப்பு மிக்க புத்தகம் என்பதனால் தற்போது அதை மிகப் பத்திரமாக வைத்துள்ளனர்.