வவுனியாவில் ஆசிரியருக்குரிய  பணித்தடையை நீக்கக்கோரி  சுவரொட்டிகள் வடமாகாண கல்விச் செயலாளரின் வீட்டின் முன்பாகவும் வேறு சில இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.

இத் துண்டு பிரசுரத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் உரிமை கோரியுள்ளது.

கடந்த  10.01.2017 அன்று வடமாகாண கல்வித்திணைக்களத்திற்கு முன்னால் இடமாற்றம் கோரி வெளிமாவட்ட ஆசிரியர்களினால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மூன்று ஆசிரியர்களுக்கு 'பணித்தடை' உத்தரவை வடமாகாண கல்வித்திணைக்களம் வழங்கியிருந்த நிலையில், தற்போது வடமாகாண கல்விச் செயலாளரின் வீட்டின் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டிகள் வவுனியா நகரின் பல இடங்களிலும் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக வவுனியா கல்வித்திணைக்களம், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரிகளுக்கு அண்மையிலும் ஒட்டப்பட்டுள்ளன.

 “ வடமாகாண கல்வி அமைச்சே ! இடமாற்றம் கோரி ஜனநாயக ரீதியில் போராடிய ஆசிரியர்களுக்கு வழங்கிய பணித்தடையை உடன் நீக்கு !, முறையற்ற இடமாற்றங்களைச் சுட்டிக்காட்டும் ஆசிரியர்களை பணித்தடை வழங்கி நசுக்கும் செயற்பாட்டை நிறுத்து !, செல்வாக்குடையோரைப் பாதுகாத்து வெளிமாவட்டத்தில் சேவை செய்பவர்களின் சேவைக்காலத்தை நீடிக்காதே !, பொய்க்குற்றம் சுமத்தி பணித்தடை வேண்டாம் !  போன்ற வாசகங்கள் குறித்த சுவரொட்டியில் எழுதப்பட்டுள்ளன.

ஜனநாயக விரோத பணித்தடை உத்தரவை நீக்காது விடின் பாரிய தொழிற்சங்க போராட்டத்தை நடத்தப்போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.