பியர் அருந்துவதற்காக 2 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை அச்செடுத்துப் பயன்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். 

மும்பையின் பயந்தர் பகுதியிலுள்ள மதுபானச்சாலைகளில் அடிக்கடி போலி இரண்டாயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் மாற்றப்பட்டிருப்பது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இது குறித்து ஆராய்ந்த விசேட பொலிஸ் குழுவொன்று, வீடு விற்பனை நிறுவனம் ஒன்றில் அதிரடி சோதனை நடத்தியது.

அதன்போது, ஸ்கேனர், வர்ண அச்சியந்திரம் என்பவற்றையும், அவற்றைப் பயன்படுத்திப் பிரதியெடுக்கப்பட்ட போலி 2 ஆயிரம் ரூபாய் நாணயத் தாள்களையும் கைப்பற்றப்பட்டன. இதனுடன் சம்பந்தப்பட்ட இரண்டு வீட்டு முகவர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.

போலி நாணயத்தாள்களை அச்சிட்டதை ஒப்புக்கொண்ட அவர்கள், இதுவரை நாற்பது தாள்களை (80 ஆயிரம் ரூபாய்) அச்சிட்டுப் பயன்படுத்தியதாகவும், அவற்றில் பெரும்பாலான நாணயத்தாள்கள் மதுபானச்சாலைகளிலேயே செலவிடப்பட்டதாகவும் ஒப்புக்கொண்டனர்.

முதலில் ஓரிரு தாள்களை மட்டுமே அச்சிட்டுப் பரிசோதித்ததாகவும், அதை யாரும் கண்டுபிடிக்கவில்லை என்பதால் இதையே தொடர்ந்து செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.