மத்திய தரைக் கடலில், பழுதான படகுகள் மற்றும் கலங்களில் பயணித்துக்கொண்டிருந்த அகதிகள் சுமார் ஆயிரம் பேர் தெய்வாதீனமாகக் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

வட அமெரிக்காவின் நிலையற்ற தன்மையால் ஆயிரக்கணக்கான அகதிகள் அங்கிருந்து இத்தாலிக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். இவர்களை இத்தாலிக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் பணியை கடத்தல்காரர்கள் செய்து வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக, நேற்று வெள்ளிக்கிழமை லிபியாவில் இருந்து சில படகுகளும், வள்ளங்களும் மத்திய தரைக் கடல் பகுதியாக இத்தாலிக்குப் பயணித்துக்கொண்டிருந்தன. ஆனால், சரியாகப் பராமரிக்கப்படாத படகுகள், ஓட்டை விழுந்த வள்ளங்களாக இருந்ததால் அதில் பயணித்தவர்களின் உயிர்களுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.

இதனிடையே, படகுகள் சில இத்தாலி நோக்கி வந்துகொண்டிருந்ததைக் கண்டறிந்த இத்தாலி கரையோரக் காவல் படையினர் விரைந்து சென்று அகதிகளை மீட்டெடுத்தனர். அவர்களுக்கு உதவியாக ஸ்பெயினின் மனித உரிமை ஆர்வலர் குழுவின் கப்பல் ஒன்றும், கரீபியன் கொள்கலன் தாங்கிக் கப்பலும் சென்று அகதிகளை மீட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான அகதிகள் காப்பாற்றப்பட்டபோதும், ஒருவர் மட்டும் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.