பூமியின் சுற்றுவட்டத்தினுள் பாரிய விண்கல் ஒன்று நுழைந்திருப்பதாகவும், அடுத்த வாரமளவில் அது பூமியைக் கடந்து செல்லும் என்றும் நாஸா தெரிவித்துள்ளது. எனினும், பூமியில் இருந்து சுமார் 32 மில்லியன் கிலோமீற்றர்கள் தொலைவிலேயே இந்த விண்கல் கடக்கும் என்பதால், பூமிக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்றும் நாஸா கூறியுள்ளது.

ஆனால், சில விண்வெளிக் கோட்பாட்டாளர்களின் கருத்து பயமுறுத்துவதாக அமைந்துள்ளது.

2016 டபிள்யூ,எஃப்9 (2016 WF9 ) என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கல் பற்றிய உண்மைகளை நாஸா மறைக்கிறது என்றும், சுமார் இரண்டரை கிலோமீற்றர் பரப்பளவுடைய இந்தப் பாரிய விண்கல் பூமியில் விழுந்து பேரழிவுகளை ஏற்படுத்தப்போகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வானியல் விற்பன்னர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் டொக்டர்.டியோமின் டாமிர் ஸக்காரோவிக் என்பவர், இந்த விண்கல்லின் தாக்கம் பயங்கரமான அணு ஆயுதம் ஏற்படுத்தக்கூடிய அழிவுகளுக்குச் சமமானதாக இருக்கும் என்றும், கடல்கள் கொதிப்பதுடன் பயங்கர சுனாமிகள் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“எங்களுக்கு உண்மை தெரியாது என்று நாஸா நினைக்கிறது. ஆனால், வானில் இருந்து கிடைக்கும் தகவல்களை நாமும் ஆராய்ந்து வருகிறோம். அதன் அடிப்படையில் நிச்சயமாக இந்த விண்கல் உலகில் பேரழிவுகளை ஏற்படுத்தும்” என்று அடித்துக் கூறுகிறார் டொக்டர்.டியோமின்!