(க.கமலநாதன்)

நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கமும் குறிக்கோளும் தற்போது மாற்றம் கண்டுள்ளது. அதனால் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரனை பாதுகாக்கும் தேசத்துரோக செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் உலபனே சுமங்கள தேரர் தெரிவித்தார்.

தற்போது பாராளுமன்றத்தில் மத்திய வங்கி பிணை முறி வழங்கள் விவகாரத்தில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் தொடர்புபட்டுள்ளமை குறித்தும் இந்த பிணை வழங்கள் செயற்பாடுகளினால் நாட்டுக்கு ஏற்பட்ட பெரு நஷ்டம் குறித்தும் காரசாரமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான ஒரு நிலையில், ஐக்கிய தேசிய கட்சி இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற முற்படுவதானது தேச துரோகச் செயற்பாடாகும். அதனால் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் தேச துரோகிகளாகி விட்டனர் என அவர் தெரிவித்தார்.

ஊழல் எதிர்ப்பு முன்னணியின் அலுவலகத்தில் சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.