பாகிஸ்தான் பாராளுமன்ற அமர்வில், சக அமைச்சர் ஒருவரால் பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாலியல் ரீதியாக விமர்சிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர் நுஸ்ரத் ஸஹர் அப்பாஸி என்ற பெண். கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வில் இவர் கலந்துகொண்டார். அப்போது, பாகிஸ்தானின் பழைமைவாதக் கட்சியைச் சேர்ந்த இம்தாத் பிட்டாஃபி என்ற அமைச்சர், பாராளுமன்றத்தில் உள்ள தனது தனியறைக்கு நுஸ்ரத்தை வருமாறு சபை உறுப்பினர்கள் மத்தியில் வைத்தே கூறியதுடன் நுஸ்ரத்தை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற நுஸ்ரத், அமைச்சரின் செய்கை குறித்து தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார். ஆனால், துணை சபாநாயகர் - அவரும் ஒரு பெண் தான் - அது குறித்து எவ்வித நடவடிக்கையையும் எடுக்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து கொதித்துப் போன நுஸ்ரத் அவையை விட்டு வெளிநடப்புச் செய்ததுடன், அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால் தீக்குளிக்கப் போவதாக, கையில் பெட்ரோலை ஏந்தியபடி ஊடகங்கள் மத்தியில் கூறினார். இந்தக் காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டு அமைச்சர் இம்தாத் மீது கடும் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன.

பிரச்சினை பூதாகாரமாவதைக் கண்ட பழைமைவாதக் கட்சியின் தலைமை, அமைச்சரை நுஸ்ரத்திடம் மன்னிப்புக் கேட்குமாறு பணித்தது. இதையடுத்து, பிற்பகல் அமர்வின்போது நுஸ்ரத்துக்கு முக்காடு ஒன்றை அணிவித்த அமைச்சர் இம்தாத் அவரிடம் மன்னிப்புக் கோரினார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த நுஸ்ரத், தற்போதைக்கு இந்தப் பிரச்சினை ஓய்ந்து விட்டாலும் கூட, பாகிஸ்தானில் பெண்களைப் பாதுகாக்கும் சட்ட திட்டங்கள் இன்னும் கடுமையாக அமல்படுத்தப்படவேண்டியிருப்பதையே இச்சம்பவம் எடுத்துக்காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.