இருபது வருடங்களுக்கு முன் இளம் பெண் ஒருவரைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் மும்பைவாசி ஒருவர் ட்ரையல் - அட் - பார் முறையில், அதாவது ஜூரிகள் இல்லாமலேயே விசாரணை செய்யப்படவுள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், குறித்த நபர் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் பெண்ணை, அவரே திருமணம் செய்து, குடும்பமாக வாழ்ந்து, குழந்தைகள் பெற்று தற்போது இருவருக்கும் விவாகரத்தும் ஆகிவிட்டதுதான்!

சமீர் கான் என்பவர் இருபது வருடங்களுக்கு முன், தீபா என்ற பெண்ணுடன் காதல்வயப்பட்டார். இருவரும் வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவர் வீட்டிலும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இருவரும் ஓடிச் சென்று திருமணம் செய்துகொண்டனர்.

தீபாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், தீபாவுக்கு 18 வயது பூர்த்தியாகாததால் சமீர் கானை பொலிஸார் தடுத்து வைத்தனர். ஆனால் தீபாவுக்கு 18 வயது பூர்த்தியடைந்ததும் அவர் அளித்த விளக்கத்தின் பேரில் சமீர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். என்றபோதும் அந்த வழக்கு நிலுவையிலேயே இருந்து வந்தது.

இந்த இருபது ஆண்டு காலத்தினுள் இருவருக்கும் குழந்தைகளும் பிறந்துவிட்டன. அதுமட்டுமன்றி, இருவருக்குமிடையே மனக் கசப்பு ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்தும் செய்துகொண்டனர். பிள்ளைகள் சமீருடன் வாழ்ந்து வருகின்றனர். சமீர் மீது புகாரளித்தவரான தீபாவின் தந்தையும் காலமாகிவிட்டார்.

இந்நிலையில், 20 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் வழக்கை முடிக்க நினைத்த நீதிமன்றம், சமீரை மீண்டும் கைது செய்து விளக்கமறியலில் அடைத்துள்ளது. இதையடுத்து, சமீர் குற்றமற்றவர் என்றும், அவர் மீதான வழக்கை மீளப் பெற்றுக்கொள்வதாக சட்டத்தரணி மூலம் தீபா நீதிமன்றில் உறுதிப்படுத்தியிருப்பதையும் குறிப்பிட்டு அவரை விடுதலை செய்யுமாறு சமீர் தரப்பில் வாதாடும் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் பிணையில் வெளிவந்திருக்கிறார் சமீர். என்றாலும், அவர் மீதான வழக்கு விசாரணைகளின்போது தவறாது சமுகமளிக்குமாறு சமீர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.