டுபாயில் புது வருட கொண்டாட்டங்களையொட்டி இடம்பெறும் வாணவேடிக்கைகளைப் புகைப்படம் எடுக்கும் முகமாக அந்நகரிலுள்ள அட்ரெஸ் ஹோட்டலில் தங்கியிருந்த புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர், அந்த மாடிக் கட்டடத்தில் இடம்பெற்ற தீ அனர்த்தத்தையடுத்து சுமார் ஒரு மணி நேரம் அந்த ஹோட்டலின் 48 ஆவது மாடியில் தொங்கிக் கொண்டிருந்துள்ளார்.
அவர் அந்த ஹோட்டலின் கண்ணாடி ஜன்னல்களை சுத்திகரிப்பதற்காக இணைக்கப்பட்டிருந்த கயிற்றைத் தனது உடலில் கட்டிக் கொண்டு தொங்கியுள்ளார்.
அச்சமயத்தில் தான் உயிரிழப்பது நிச்சயம் எனவும் தன்னால் புது வருட பிறப்பை காண்பது சாத்தியமில்லை எனவும் அவர் கருதினார்.
இதன் போது அவர் தொங்கிய இடத்துக்கு சுமார் 10 மீற்றர் தொலைவில் தீ பரவிக் கொண்டிருந்துள்ளது.
அந்தத் தீயால் வெளிப்பட்ட புகை யால் தான் மூச்சுத் திணறி உயிரிழக்கப் போவது நிச்சயம் என்றே கருதியுள்ளார். இந்நிலையில் பொது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், அவர் மீட்புப் பணியாளர்களால் மீட்கப்படும் வரை அவருக்கு தைரியமளித்துக் கொண்டிருந்துள்ளனர்.