கொட்டகலை - ஸ்டோனிகளிப் தோட்டத்தில் 100ற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக பணிப்பகிஷ்கரிப்பு  ஆர்ப்பாட்டத்தில் இன்று காலை ஈடுபட்டனர்.

ஸ்டோனிகிளிப் தோட்டத்தின் தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டமானது அத்தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி வரும் தொழிலாளர்கள் நலத்தில் தோட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கடந்த சில வாரங்களுக்கு முன் ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடதக்கது.

அதேபோன்று நேற்று குளவி கொட்டுக்கு இலக்காகி ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இத்தோட்டப்பகுதியில் குளவி கொட்டுகளுக்கு இலக்காகி வரும் தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் தோட்ட நிர்வாகம் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுத்ததாக தெரியவில்லை.

தேயிலை தோட்டங்களில் காணப்படும் குளவி கூடுகளை அகற்றுவதற்கு இத்தோட்ட மக்கள் பலமுறை தோட்ட நிர்வாக அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.