ஸ்ரீ லங்கன் எயார் நிறுவனத்தின் மோசடி குறித்து சர்வதேச விசாரணை முன்னெடுப்பு

Published By: Priyatharshan

21 Jan, 2017 | 09:30 AM
image

முன்னைய ஆட்சியின் போது ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் நடந்த மோசடிகள் தொடர்பில் சர்வதேச விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. இந்த விசாரணையின் முடிவில் உண்மை நிலவரம் தெரியவரும் என அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.

அத்துடன் முன்னைய ஆட்சியின் போது முன்னெடுக்கப்பட்ட மத்திய வங்கி மோசடிகள் குறித்து விரைவில் விசேட நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யவுள்ளோம். மேலும் முன்னைய ஆட்சியின் போது அரச நிறுவனங்களில் இருந்த மாபியா கும்பல் தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் சர்வதேச விமான நிறுவனமான எமிரெல்ஸ் நிறுவனத்தின் பங்கு வகித்த போது 440 கோடி ரூபா இலாபம் பெற்றிருந்தது. எனினும் தனது சுய இலாபத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசுடமை ஆக்கினார். இதனால் 2009 ஆம் ஆண்டு 930 கோடி ரூபாவும் 2014 ஆம் ஆண்டு 320 கோடி ரூபாவும் 2016 ஆம் ஆண்டு 108 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

இதன்பிரகாரம் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 2008 ஆம் ஆண்டு முதல் அரசுடமை ஆக்கப்பட்டதில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரைக்கும் சுமார் 3200 கோடி ரூபா நட்டம் அடைந்துள்ளது. எனினும் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு 2016 ஆம் ஆண்டளவில் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் நட்டத்தை 108 கோடி ரூபா வரைக்கும் குறைத்தோம். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசுடமையாக்கும் நோக்குடன்  700 கோடி ரூபாவுக்கு எமிரேட்ஸ் நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்தார். அதேபோன்று முன்னைய ஆட்சியின் போது  எயார்லைன்ஸ் நிறுவனம் அரசுடமை ஆக்கப்பட்டதன் பின்னர் 15 ஆயிரம் கோடி ரூபா கடன் பெற்றுள்ளனர். ஆகவே இவ்வளவு மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்த தருவாயிலேயே ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தை நாம் பொற்பேற்றோம். தற்போது இந்த பாரத்தையும் நாமே சுமக்க வேண்டியுள்ளது. 

கடந்த பத்து வருடத்தின் போது பாரிய அளவிற்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மாறாக மக்கள் உடைமைகள் வீணான முறையில் செலவிடப்பட்டது. இதனால் மக்களுக்கே பாதிப்பாகும். இவ்வளவு அநியாயம் நடக்கும் போது தற்போது எங்கள் மீது சேரு பூசுபவர்கள் எங்கிருந்தனர். கண்ணாடி முன் இருந்து கல் அடிப்பதனையே எதிரணியினர் முன்னெடுத்து வருகின்றனர். 

அத்துடன் முன்னைய ஆட்சியின் போது தனது உறவினர் ஒருவரை நிறுவனத்தின் தலைவராக நியமித்து ஏ 330 விமானமொன்றை கொள்வனவு செய்து அரச குடும்பம் பயணிப்பதற்காக அதிசொகுசு வாய்ந்த தனி பிரிவொன்றை அமைத்தனர். அந்த பிரிவில் அனைத்து வசதிகளும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதற்காக 10 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது. இதற்கு யார் பொறுப்பு கூறுவது. இவ்வாறான செயற்பாடுகள் யார் அனுமதி கொடுத்தது. எவ்வளவு அநியாயங்கள் செய்துள்ளனர். 

அதேபோன்று முன்னைய ஆட்சியின் போது ஏ 350 ரக விமானம் எயார் கெப் நிறுவனத்திடமிருந்து குத்தகைக்கு பெறப்பட்டது. இந்த விமானங்கள் குத்தகைக்கு செல்லும் முழு செலவானது 600 மில்லியன் டொலராகும். அத்துடன் இந்த முறைமையின் ஊடாக ஒரு மாத்திற்கு ஒரு விமானத்திற்கு ச‍ெலுத்தப்படும் தொகையானது 22 கோடி ரூபாவாகும். இதன்மூலம் இலங்கைக்கு 7.5 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டது. இவ்வாறான கொடுக்கல் வாங்கல் முறைமை கொண்ட முக்கிய தீர்மானங்களுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்படவில்லை. அந்த காலத்தின் போது உலக சந்தை தரவுகளின் பிரகாரம் குறித்த விமான குத்தகை பெறும் விலை தரவு 14 கோடியாகும். எனினும் முன்னைய அரசாங்கம் 22 கோடி ரூபாவிற்கு குத்தகைக்கு பெற்றுள்ளது. இது பாரிய மோசடியாகும்.  

இதன்பிரகாரம் நான்கு விமானங்களின் குத்தகை ஒப்பந்ததை இரத்து செய்து விட்டோம். குறிப்பாக ஏ350 விமானம் என்பது தூர பயணங்கள் செய்வதற்காகவே கொள்வனவு செய்யப்படுகின்றன.இந்த விமானம் 14 மணித்தியாலங்கள் வான்பரப்பில் பயணிக்க கூடியது. இலங்கையை பொறுத்தவரையில் தூர பயணம் என்பது லண்டனுக்கு மாத்திரமே செல்கின்றன. லண்டனுக்கு செல்வதற்கு 10 மணித்தியாலங்கள் எடுக்கும். அப்படியாக இருக்கும் போது இலங்கையின் பயண கட்டமைப்பின் பிரகாரம் இந்த விமானத்திற்கு எந்தவொரு தேவையும் கிடையாது. 

முன்னைய ஆட்சியின் போது ஏ350 ரக விமானம் 8 கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த ஏ350 விமான குத்தகை பெறும் ஒப்பந்ததை இரத்து செய்துள்ளோம். இதனால் 8 விமானத்திற்கு 98 மில்லியன் டொலர் நஷ்ட ஈடாக செலுத்த வேண்டியுள்ளது. எனினும் ஏற்கனவே நான்கு விமானங்களுக்கு இரத்து செய்யப்பட்டமைக்கு 17 மில்லியன் நஷ்ட ஈடு செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக எயார் கெப் நிறுவனத்திடமிருந்து மேலதிகமாக ச‍ெலுத்தப்பட்ட 4 விமானங்களில் 3 விமானங்களுக்கு பதிலாக ஏ330 விமானங்களை குத்தகைக்கு பெறவுள்ளோம்.

எனவே முன்னைய ஆட்சியின் போது எவ்வளவு அநியாயம் செய்துள்ளனர். இது மோசடி இல்லையா? . எனவே இது தொடர்பாக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து எந்தவொரு இரகசியத்தை என்னால் வெளியிட முடியாது. 

அத்துடன் முன்னைய ஆட்சியின் போது இலங்கை மத்திய வங்கி கொடுக்கல் வாங்கல்களின் போது பாரியளவில் மோசடிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே இது தொடர்பில் விரைவில் விசேட நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யவுள்ளோம். 

மேலும் தற்போதும் அரச நிறுவனங்களின் முன்னைய ஆட்சியின் போது இருந்த மாபியா கும்பல் இன்னமும் செயற்பட்டு வருகின்றன. இதற்கு என்னால் எந்தவித நடவடிக்கையையும் எடுக்க முடியாமல் உள்ளன. எனினும் விரைவில் இது குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10